வந்தனா தாஸ், கேரள உயர்நீதிமன்றம் twitter page
இந்தியா

”அந்தப் பெண்ணை காப்பாற்ற தவறிவீட்டீர்கள்” - பயிற்சி மருத்துவர் மரணத்தில் கேரள அரசை சாடிய நீதிமன்றம்!

Prakash J

கேரள மாநிலம் கொட்டக்கார தாலுகா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்தவர் வந்தனா தாஸ். இந்த நிலையில், தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட சண்டையில் காயம் அடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சந்தீப் என்பவரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக அந்தப் பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த நபரின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஆத்திரமடைந்த சந்தீப், வந்தனா தாஸை கத்திரிக்கோலால் பலமுறை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வந்தனா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பயிற்சி மருத்துவர் கொலை தொடர்பாக, கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன், கௌசர் எடப்பாடி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், கேரள அரசையும், காவல் துறையினரையும் நீதிமன்றம் கடுமையாகச் சாடியது. இதுகுறித்து நீதிபதிகள், “நீங்கள் இந்தப் பெண்ணை காப்பாற்ற தவறிவீட்டீர்கள். இது, உங்கள் காவலில் இருந்து ஒருவரை அழைத்து வந்த வழக்கு. ஆகையால், காவல்துறை தொடர்ந்து விழிப்புடன் இருந்திருக்க வேண்டும். அந்த நபர், அசாதாரணமான நடத்தையை வெளிப்படுத்திய தருணத்தில், காவல் துறை உடனே தலையிட்டு, அவரை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். காவல்துறை என்பது எதிர்பாராததைப் புரிந்துகொள்வதும் எதிர்பார்ப்பதும் ஆகும். சட்டத்தை மீறாமல் இருப்பதை உறுதி செய்வது உங்களது முதல் கடமையாக இருக்க வேண்டாமா?” எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து அவர்கள், “குற்றம் சாட்டப்பட்டவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்துவதற்கான நெறிமுறை என்ன? இரவிலும் கூட நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் மாஜிஸ்திரேட்டுகள் முன் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். மருத்துவர்கள் முன் ஆஜர்படுத்தும்போது இதுபோன்ற நெறிமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை? மருத்துவர்கள் முக்கியமில்லை என்று சொல்கிறீர்களா? அதனால்தான் மற்ற நிகழ்வில் பின்பற்றப்படும் நெறிமுறைகளை நாங்கள் கேட்கிறோம். எனவேதான் மருத்துவர்கள் விஷயத்திலும் இதையே பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த மாதிரியான நபர்களை, பெண் மருத்துவர் முன் அழைத்துச் செல்லும்போது போலீசார் வெளியே நிற்பதாகக் கூறுவது பேரழிவுக்கான செய்முறையாகும். மருத்துவர்களைப் பாதுகாக்க முடியாவிட்டால், அனைத்து மருத்துவமனைகளையும் மூடுங்கள்" என நீதிபதிகள் கடுமையாகச் சாடினர்.

தொடர்ந்து மருத்துவரின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்த நீதிபதிகள், ”இன்று நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதற்குமுன் வேறு எந்த நாட்டிலும் இது நடந்திருக்கிறதா அல்லது இதிலும் நாம்தான் முதலில் வந்திருக்கிறோமா? இந்த விஷயத்தில், பெற்றோர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் போலீசார் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக கேரள டி.ஜி.பி. உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.