சபரிமலை யாத்திரைக்கு விர்ச்சுவல் க்யூ என்ற முன்பதிவு திட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் கேரள அரசுக்கும், காவல்துறைக்கும் இருக்கிறதா என கேரள உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் விர்ச்சுவல் க்யூ என்ற முன்பதிவு திட்டத்தை கேரள அரசும், காவல் துறையும் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், சபரிமலை தொடர்பாக எந்தவொரு விதியையும், உத்தரவையும் பிறப்பிக்கும் அதிகாரம் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்திற்கு மட்டுமே இருக்கிறது என்றும், காவல்துறைக்கும், அரசுக்கும் எப்படி அந்த அதிகாரம் வந்தது என கேள்வி எழுப்பி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு நீதிபதிகள் நரேந்திரன், அஜித்குமார் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், சபரிமலை பக்தர்கள் முன்பதிவு செய்தே வர வேண்டும் என்பதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பினர். மேலும், கோயில் விவகாரத்தில் அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது. பக்தர்கள் கூட்ட மேலாண்மை முறையை அமல்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்திடம் அரசு அனுமதி பெற்றதா? எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, வரும் 26 ஆம் தேதி பதில் அளிக்க உத்தரவிட்டனர்.