சமூக ஊடகங்கள், ஓடிடி மேடைகள் மற்றும் டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுக்கான புதிய நெறிமுறைகளை சில நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்திருந்தது. 2000-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் சமூக ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்களுக்கான நெறிமுறைகள் எனும் பெயரில் இந்த நெறிமுறைகள் வெளியாகின. சமூக ஊடகங்கள், உரிய உத்தரவுகளின் கீழ் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும், ஓடிடி தளங்கள் சுய கட்டுப்பாடு உள்ளிட்ட மூன்றடுக்கு கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும், டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் பத்திரிகை கவுன்சிலுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் உள்ளிட்டவை புதிய நெறிமுறைகளின் முக்கிய அம்சங்களாக இருந்தன.
இதேபோல் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் பயனர்கள் தரப்பிலான புகார்களை கவனிக்க குறை தீர்ப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என்பதும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் சர்ச்சைக்குரிய தகவல்களை முதலில் பகிர்ந்தவர் விவரத்தை அளிக்க வேண்டும் என்பதும் புதிய நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள். இந்த விதிமுறைகளுக்கு முதலில் வரவேற்பு இருப்பதுபோல் தோன்றினாலும் இந்தக் கட்டுப்பாடுகள் தணிக்கைக்கு வழி வகுக்கும் என்றும், பயனர்களின் பிரைவசியை மேலும் பாதிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், இந்தப் புதிய விதிகளை எதிர்த்து 'லைவ்லா இந்தியா' (LiveLaw) என்ற சட்ட ஊடகம், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் மனு தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் மார்ச் 10 புதன்கிழமை மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதன் பதிலைக் கோரும் அதே வேளையில், புதிய மனுக்களின் நிலுவையில் இருக்கும் வரை புதிய விதிகளின் மூன்றாம் பாகத்தின் கீழ் லைவ்லாவுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதை மத்திய அரசு தடைசெய்துள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சந்தோஷ் மேத்யூ, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 87 செய்தி ஊடகங்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கவில்லை.
'டிஜிட்டல் மீடியா' என்ற சொல் ஐ.டி சட்டத்திலோ அல்லது புதிதாக வெளியிடப்பட்ட விதிகளிலோ வரையறுக்கப்படவில்லை. புதிய விதிகளின் கீழ் உள்ள ‘சுய ஒழுங்குமுறை’ பொறிமுறையானது முரண்பாடானது" என்றவர், ஷ்ரே சிங்கால் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, ``புதிய நெறிமுறைகள் தீர்ப்பில் நிறுவப்பட்ட நடைமுறை பாதுகாப்புகளின் சாராம்சத்துக்கு எதிராக செல்ல முயற்சிக்கிறது" என்று வாதிட்டார்.