நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக் கோரி நடிகர் திலீப் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதனால் கேரள நடிகர் சங்கமான 'அம்மா'வில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார். 85 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமினில் வெளியே வந்தார் திலீப். இந்நிலையில் தன்னை கடத்தல் விவகாரத்தில் வேண்டுமென்றே சிக்கவைத்துள்ளனர் என்றும், இந்த விவகாரத்தால் தன்னுடைய வாழ்க்கையின் கண்ணியம் கெட்டுவிட்டதாகவும், இது குறித்து உரிய விசாரணை வேண்டுமென்றும் நடிகர் திலீப் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், தேவையற்ற மனுக்களை தொடர்ந்து நடிகர் திலீப் வழக்கை மழுங்கடிக்கச் செய்வதாக குற்றம் சாட்டினார்.
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக் கோரி ஜூன் 13ம் தேதி நடிகர் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் கேரள போலீசாரின் விசாரணை ஒருசார்பாக இருப்பதாகவும், உண்மை வெளிவர வேண்டுமானால் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், சிபிஐ விசாரணை கோருவது தேவையில்லாத ஒன்று எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது வாதாடிய திலீப் தரப்பு, நடிகையின் கடத்தலின் போது பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படும் வீடியோவையும், வீடியோ எடுக்க பயன்படுத்தப்பட்ட போனையும் கைப்பற்ற கேரள போலீசார் தவறிவிட்டனர் என்று தெரிவித்தனர்.
இரு தரப்பையும் விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் விசாரணையை தாமதப்படுத்த தேவையற்ற மனுக்களை தொடர்வதாக கூறி நடிகர் திலீப் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது. நடிகையின் கடத்தலின் போது பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படும் வீடியோவையும் வீடியோ எடுக்க பயன்படுத்தப்பட்ட போனையும் தங்கள் தரப்பிடம் ஒப்படைக்க வேண்டுமென நடிகர் திலீப் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.