குருவாயூர் கோவிலில் நடைபெறும் திருமணம் pt web
இந்தியா

‘எங்களுக்கு நேரம் கொடுத்தீங்கன்னா போதும்’ கேரள குருவாயூர் கோவிலில் ஒரேநாளில் 356 திருமணங்கள்

கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இன்று மட்டும் 356 திருமணங்கள் நடைபெறுவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

PT WEB

செய்தியாளர் சுமிதா மனு

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா ஆலயம்

இந்தியாவிலேயே ஒரு நாளில் அதிக திருமணங்கள் நடக்கும் ஆலயம், கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா ஆலயம். உலகிலேயே திருமணங்கள் அதிகம் நடைபெறும் ஆலயங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. இங்கு தங்களது திருமணத்தை நடத்த மணமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆண்டிலேயே அதிக திருமணங்கள் நடைபெறும் ஆவணி மாதத்தில் (சிங்க மாதம் மலையாள மாதம்) இந்த ஆலயத்தில் மேலும் அதிகமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். உதாரணமாக, கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி மட்டும் 277 திருமணங்கள் நடந்தது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 தேதி மட்டும் 264 திருமணங்கள் நடந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி 248 திருமணங்கள் நடந்தன. இந்நிலையில் இன்று மட்டும் சுமார் 356 திருமணங்கள் நடைபெற இருக்கின்றன.

ஒரே நாளில் 356 திருமணங்கள்

இந்த கோவிலில் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்கள் திருமணங்களுக்கு முகூர்த்த நேரம் எல்லாம் பார்ப்பதில்லை. குருவாயூர் தேவசம் போர்ட் அலுவலகத்தில் தங்களது திருமணத்திற்கான முன்பதிவு செய்யும் போது, தேவசம் போர்ட் ஒதுக்கும் நேரத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அப்படி முன்பதிவு செய்யப்படும் திருமணங்கள் ஆலயத்தின் முன்புறமுள்ள நான்கு கதிர் மண்டபங்களில் வைத்து நடைபெறும்.

இந்நிலையில், இன்றைய நாள் ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிறு என்பதாலும் சோதி ( சுவாதி ) நட்சத்திர நாள் என்பதாலும், இன்று மட்டும் 356 திருமணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிக திருமணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருப்பதால், எப்போதும் அதிகாலை ஐந்து மணிக்கு துவங்கும் திருமணங்கள் இன்று காலை நான்கு மணிக்கே துவங்கியது.

திருமணத்திற்கு 20 பேர் மட்டுமே அனுமதி 

இன்று காலை 4 மணிமுதல் காலை ஏழு மணிவரை மட்டும் 80 திருமணங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், மீதி திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களது கூட்டமும் அதிகமிருக்கும் என்பதால், குருவாயூர் கோவிலில் 150 காவல் துறையினர் மற்றும் 100 தேவசம் போர்ட் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அதிகமான திருமணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருப்பதால், கூடுதலாக இரு மண்டபங்கள் அமைக்கப்பட்டு, நான்கு கதிர் மண்டபங்களுக்கு பதிலாக ஆறு கதிர் மண்டபங்களில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.

பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் போலவே திருமணத்தின் போது ஒரு மண்டபத்தில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது மணமகன் மற்றும் மணமகள் வீட்டில் தலா 10 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.