பள்ளிக் குழந்தைகள் எக்ஸ் தளம்
இந்தியா

கேரளா: ‘ஏன் பள்ளிச்சீருடை அணிவில்லை?’ - குழந்தைகளை வெயிலில் நிற்கவைத்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!

கேரளா கொல்லத்தை அடுத்த கருக்கோன் என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிச்சீருடை அணிந்து வராத குழந்தைகளை ஆசிரியர்கள் வெயிலில் நிற்க வைத்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

Jayashree A

கேரளா கொல்லத்தை அடுத்த கருக்கோன் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் நேற்று முன்தினம் (செப் 26) பள்ளி சீருடை அணியாமல் வந்ததால் ஆசிரியர்கள் அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் பொருட்டு சுட்டெரிக்கும் வெயிலில் நிற்கவைத்ததாகத் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் இது குறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்கவும், இச்செய்தி அப்பகுதியில் தீயாகப் பரவியுள்ளது.

தகவல் அறிந்ததும் இளைஞர் காங்கிரஸ் மற்றும் கே.எஸ்.யு-வை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்றுள்ளனர். இவர்கள் வந்ததை தெரிந்துக்கொண்ட ஆசிரியர்கள் வெய்யிலில் நின்ற மாணவர்களை அவசர அவசரமாக வகுப்பறைக்கு அனுப்பியுள்ளனர்.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பியதில், இது போன்று ஒரு சம்பவமானது பள்ளியில் நடைபெறவில்லை என்றும் இது உண்மைக்கு புறம்பான தகவல் என்றும் மறுப்பு அளித்துள்ளனர்.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலோர் அப்பகுதியில் இருக்கும் ஆலயம் பஞ்சாயத்து பொது மக்களின் குழந்தைகள். இக்குழந்தைகளுக்கு இந்த ஆண்டு பள்ளி நிர்வாகமானது அரசிடமிருந்து சீருடைகளை பெற்று வழங்கவில்லை என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளி மாணவர்கள்

பெற்றோர்களின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த பள்ளி நிர்வாகமானது, அரசு மானியம் கிடைக்காததால் சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், சிலர் வேண்டுமென்றே பிரச்னைகளை உருவாக்கி பள்ளியின் நற்பெயரை கெடுக்க முயற்சிப்பதாகவும் கூறுகிறது.