இந்தியா

வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள் - சொமேட்டோ நிறுவனத்துடன் கைக்கோர்த்த கேரளா

வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள் - சொமேட்டோ நிறுவனத்துடன் கைக்கோர்த்த கேரளா

webteam

கேரளாவில் நியாயவிலைக் கடையிலிருந்து பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக சொமேட்டோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று உலகம் முழுவதும் 22 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது 24,065 பேர் இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். உலகளவில் 199 நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 5,31,609ஆக உயர்ந்துள்ளது. உலகம் உழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,23,391 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்பில் இத்தாலி முதலிடத்திலும் ஸ்பெயின் 2-வது இடத்திலும், சீனா 3-வது இடத்திலும், அமெரிக்கா 4-வது இடத்திலும் உள்ளது. இத்தாலியில் 8,215, ஸ்பெயினில் 4,365, சீனாவில் 3,287, அமெரிக்காவில் 1,293 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொருத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக உள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 633 ஆக உள்ளது. சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44ஆக உள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக கிடைக்க வழி செய்யும் வகையில் சொமேட்டோ நிறுவனத்துடன் ஒப்பந்த நடவடிக்கையை கேரள அரசு எடுத்துள்ளது. முதற்கட்டமாக எர்ணாகுளம் மாவட்டம் காந்திநகர் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திலுள்ளவர்களுக்கு நேரடியாக பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளது.

தேவைப்படும் பொருட்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் சொமேட்டோ ஊழியர்கள் வீட்டிற்கே வந்து விநியோகிப்பர் என எர்ணாகுளம் ஆணையர் சுஹாஸ் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.