இந்தியா

திருநங்கைகளுக்காக மீண்டும் முக்கிய முடிவெடுத்த கேரள அரசு

rajakannan

பொதுவாக திருநங்கைகள் சந்திக்கும் பிரச்னைகளை அளவிட முடியாது. குடும்பம், சமூகத்தால் ஒதுக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் உரிமையும் மறுக்கப்படுகிறது. இளம் வயதிலேயே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதால் கல்வியும் மறுக்கப்படுகிறது. 

இந்நிலையில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சத்தை கேரள அரசு உதவித் தொகையாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘சமூக நீதித் துறையின் வழியாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேரள அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இது உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, திருநங்கைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக கேரள அரசு கடந்த மாதம் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி திருநங்கைகள் படிப்பதற்கு ஏதுவாக அனைத்து கல்லூரிகளிலும் உள்ள அனைத்து படிப்புகளில் அவர்களுக்காக கூடுதலாக இரண்டு இடங்களை ஒதுக்க கேரள அரசு முடிவு செய்தது. அதற்கு முன்பாக, கேரளாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் திருநங்கைகளுக்கென சிறப்பு மருத்துவ பிரிவு அமைக்க கடந்த ஆண்டு முடிவு எடுத்தது.