ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கார் மனோரமா
இந்தியா

கேரளா: தவறான பாதையை காட்டிய கூகுள்மேப்.. வழி தவறிச் சென்று காருடன் தண்ணீரில் தத்தளித்த நண்பர்கள்!

Jayashree A

நாம் புதிதாக ஒரு இடத்திற்கு செல்லவேண்டுமென்றால், ஆட்டோகாரர்களிடமோ அல்லது, அப்பகுதியில் இருக்கும் பெட்டிக்கடைகாரர்களிடம் வழி கேட்கும் காலமெல்லாம் மாறிவிட்டது. கையில் மொபைல் இருந்தால் போதும் கூகுள் மேப்பே நாம் செல்லவேண்டிய இடத்திற்கான வழியை தெரிவித்துவிடும். கூகுள் மேப்பை நம்பி தெரியாத பல இடங்களுக்கும் சென்று வரும் நிலையில், சிலசமயம் நமக்கு கூகுள் மேப் மோசம் செய்துவிடுகிறது.

இது போல் கூகுள்மேப் சதிசெய்த சம்பவம் கேரளா காசர்கோடு பகுதியில் நடந்துள்ளது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

கேரளா காஞ்சங்காடு அம்பலத்துறையைச் சேர்ந்தவர்கள் எம்.அப்துல் ரஷீத் (35) மற்றும் தஷ்ரிப் (36). நண்பர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் உப்பினங்கடியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு செல்வதற்காக, கூகுள் மேப் உதவியுடன் தங்களது காரில் பயணப்பட்டனர். ரஷீத்தான் காரை ஓட்டி சென்றுள்ளார்.

கூகுள் மேப், அவர்களுக்கு டேக் ரைட்... டேக் லெப்ட் என்று வழிகாட்ட கார் விடியற்காலை 5.15 மணியளவில் பாண்டி வனப்பகுதியை கடந்து கர்நாடகா நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அப்பொழுது, பாண்டி வனப்பகுதியின் நடுவே பள்ளஞ்சி என்ற தரைப்பாலம் இருந்துள்ளது. கடந்த சில தினங்களில் அப்பகுதியில் பெய்த கனமழையால் தரைப்பாலமானது மழைநீரில் நிரம்பி உள்ளது. இது தெரியாத ரஷீத், சாலையில்தான் மழைத்தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது, சுலபமாக இதைக் கடந்து சென்று விடலாம் என்று நினைத்து தண்ணீரில் காரை செலுத்தியுள்ளார். ஆனால் காரானது தரைப்பாலத்திற்குள் இறங்கி தண்ணீரில் சுமார் 150 மீட்டர் தூரம் அடித்துக்கொண்டு சென்றுள்ளது. காருக்குள் இருந்த இருவருக்கும் எப்படி தப்பிப்பது என்று தெரியாத நிலையில், நல்லவேளையாக காரானது அப்பகுதியில் இருந்த ஒரு படகில் மோதி நின்றுள்ளது.

இதையும் படிக்கலாம்: மீண்டும் ’KGF’ தங்கச் சுரங்கத்தை திறக்க அனுமதி! ’1804 - 2024’.. மிரட்டும் இரு நூற்றாண்டு வரலாறு!

அந்த நிமிடத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட ரஷீத், தஷ்ரிப் இருவரும் காரின் கண்ணாடியைத் திறந்து அதன் வழியாக வெளியேறி உள்ளனர். இருப்பினும் இருவரையும் வெள்ளம் அடித்துக்கொண்டு போக பார்க்க, அவர்கள் அப்பகுதியில் இருந்த புதர்கள் பிடித்துக்கொண்டு உயிர்பிழைத்தனர்.

அதன் பிறகு இருவரும் தங்களது செல்போனில் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் போலிசாரிடம் தகவல் தெரிவித்தனர். கிட்டத்தட்ட ஒருமணி நேர முயற்சிக்கு பிறகு அங்கு வந்த போலிசாரும், தீயணைப்புத்துறையினரும் இருவரையும் மீட்டனர். மேலும் அவர்களைத்தாண்டி அரைகிலோமீட்டர் தண்ணீரில் பயணம் செய்த காரையும் மீட்டு அவர்களிடம் தந்தனர்.

இதில் என்ன வேடிக்கை என்றால் தரைப்பாலத்திற்கு அரை கிலோமீட்டர் தூரத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்வாகன போக்குவரத்திற்காக கட்டப்பட்ட ஓவர் பிரிட்ஜ் ஒன்று உள்ளது. இது தெரியாத கூகுள் மேப் இவர்களுக்கு தவறான பாதையைக்காட்டி தண்ணீருக்குள் தத்தளிக்கவிட்டுள்ளது.