கடத்தப்பட்ட உமர் எக்ஸ் தளம்
இந்தியா

கேரளா: ஆட்டோவில் சென்ற இளைஞரை கடத்திய கும்பல்; விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!

திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து ஆட்டோவில் சென்ற ஒருவரை பின்தொடர்ந்த காரில் வந்த 5 பேர் அடங்கிய கும்பல் ஒன்று, அவரை கடத்திச் சென்று அடித்து உதைத்துள்ளது. இதன் பிண்ணனியில் தங்க கடத்தல் இருந்துள்ளதாக தெரிகிறது... என்ன நடந்தது? பார்க்கலாம்.!

Jayashree A

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் முகமது உமர் என்ற இளைஞர். இவர் கடந்த புதன்கிழமை இரவு, திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து ஆட்டோவில் சென்றுள்ளார். உமர் சென்ற ஆட்டோவை பின்தொடர்ந்தபடி ஒரு கார் சென்றுள்ளது. ஆட்டோவானது தம்பனூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் (இரவு சுமார் 12.30 மணியளவில்) தகரபரம் சாலை அருகே ஆட்டோவை வழிமறித்து உமரை கடத்தி சென்றுள்ளனர் காரில் இருந்த நபர்கள்.

உமர் ஆட்டோ டிரைவரிடம் “தம்பி, என்னை தனியாக விட்டுவிடாதீர்கள்... என்னை காப்பாற்றுங்கள்...” என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த கும்பல் உமரை அடித்து உதைத்து கடத்திச் சென்றுள்ளது. உடனடியாக ஆட்டோ டிரைவர் வஞ்சியூர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கிருக்கும் சிசிடிவியின் உதவியுடன் விசாரணையை மேற்கொண்டனர். இதில் வல்லகடவு பகுதியில் இருந்து உமரை கடத்திய காரை போலீசார் மீட்டனர். மேலும் ஆட்டோ ஓட்டுனரின் அடையாளத்தின் பெயரில், உமரை கடத்தியதாக கூறப்பட்ட அந்த கும்பலை அவர்கள் கைது செய்து விசாரித்தனர்.

உமர்

விசாரணையில், வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்களிடமிருந்து தங்கத்தை வாங்கி தமிழகத்திற்கு கொண்டுவரும் வேலையை உமர் செய்து வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதில் சம்பவ தினத்தன்று தங்கம் கடத்தி வந்த வெளிநாட்டவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பிடித்து அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்துக் கொண்டுள்ளனர். ஆதலால் உமர் தங்கம் ஏதும் இல்லாமல் ஆட்டோ பிடித்து தமிழகம் செல்வதற்காக பேருந்து நிலையம் சென்றுள்ளார்.

இது தெரியாத மர்ம கும்பல் உமரிடம் தங்கம் இருப்பதாக நினைத்து அவரை தங்கத்தை கொடுக்குமாறு அடித்து உதைத்து துன்புறுத்தி இருக்கிறது. இதில் போலீசார் பத்திரமாக உமரை மீட்டதுடன், கடத்தல் கும்பலிடம் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.