Eat Kochi Eat Rahul N. Kutty Instagram
இந்தியா

பிரபல மலையாள யூ-ட்யூபர் வீட்டில் சடலமாக மீட்பு... சந்தேக மரணமென வழக்கு! அதிர்ச்சி பின்னணி

‘Eat Kochi Eat’ என்ற சமூக வலைதளம் மூலம் பிரபலமான ராகுல் N. குட்டி என்னும் ஃபுட் வ்லாகர் அவரது வீட்டில் மரணமடைந்து கிடந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

’Eat kochi Eat' என்னும் சமூக வலைதளத்தின் மூலம் உணவு பிரியர்களுக்கு நன்கு பரிட்சயமானவர் ராகுல் என்.குட்டி (வயது 33). இவர் மாதவனத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை அதிகாலை திடீரென மரணித்துள்ளார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் சப்ஸ்க்ரைபர்ஸ் இடையே கடும் அதிர்ச்சியையும் மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Eat Kochi Eat Rahul N. Kutty

’Eat kochi Eat’

2015 ஆம் ஆண்டு முதல் ‘Eat kochi Eat’ என்ற சமூக வலைதள பக்கங்கள் மூலம் பிரத்யேக உணவு சார்ந்த காணொலிகளை வெளியிட்டு வந்த இவர், உணவு பிரியர்கள் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவரும்கூட. Culinary Culture (சமையல் கலாச்சாரம்) என்ற அமைப்பின் உறுப்பினராகவும் திகழ்ந்துவந்தார். கொச்சியில் புதிதாக தான் காணும் அனைத்து விஷயங்களையும் ‘ஓ கொச்சி, ஈட் கொச்சி ஈட்’ போன்ற சமூக வலைதள பக்கங்கள் மூலமாக பதிவிடுவது இவரது வழக்கம்.

இந்நிலையில் மாதவனத்தில் உள்ள அவரது வீட்டில் ராகுல் இறந்து கிடந்தது, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தினையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக கடந்த புதன் கிழமை வரையில் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துள்ளார்.

Eat Kochi Eat Rahul N. Kutty

Eat Kochi Eat Rahul N. Kuttyவெள்ளி - சனி இடையேயான அதிகாலை வேளையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இவரது மரணத்தை காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணமென வழக்குப்பதிவு விசாரணை செய்துவருகின்றனர். தற்கொலை செய்துள்ளார் என்றும் சில செய்திகள் வெளிவருகின்றன.

ராகுலை இழந்து அவரது மனைவியும், இரண்டு வயது மகனும் தவித்து வரும் நிலையில், இவரது மறைவு குறித்து Eat Kochi Eat தனது பக்கத்தில், “அருமையான இந்த ஆன்மாவை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு, பிரிவை தாங்கும் வலிமை கிடைக்க வேண்டும். அனைவரும் பிராத்தியுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

இவரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.