இந்தியா

பனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: வீடியோ

பனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: வீடியோ

rajakannan

கேரளாவில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், அங்கிருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டார்.

கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில் அங்கு பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு நிலவி வருகிறது. பாலக்காடு மாவட்டத்திலுள்ள மலப்புழா, வாளையார் ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்தவிடப்பட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அப்படியான மீட்பு பணிகளின் போது தான் பனிக்குடம் உடைந்த நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் மீட்கப்பட்டார். கேரளாவில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் கர்ப்பிணி ஒருவர் தவித்து வந்தார். அவரை பேரிடர் மீட்பு படையினர் ஹெலிக்காப்டர் மூலமாக மீட்டனர். மீட்கப்பட்ட கர்ப்பிணி அருகில் உள்ள சஞ்ஜிவினி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு குழந்தை பிறந்திருப்பதாகவும் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அது தொடர்பான வீடியோவையும், படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் கடற்படையினர் பதிவிட்டுள்ளனர்.