பயணி ஒருவர் அடித்த ஜோக் ஒன்றிற்காக 2 மணி நேரம் தாமதமாக கிளம்பி உள்ளது ஒரு விமானம். என்ன நடந்தது, எங்கு நடந்தது என்று பார்க்கலாம்...
கேரளா நெடும்பாசேரியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் தனது குடும்பத்துடன் பாங்காக் செல்வதற்காக கொச்சியில் உள்ள விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அங்கிருந்த அனைவரிடமும் ஜோக் அடித்து சிரித்துப் பேசி மகிழ்ந்துள்ளார். இவரது ஜோக்கால் அங்கிருந்தவர்கள் சிரித்து மகிழ்ந்தும் உள்ளனர்.
அச்சமயம், இவர்கள் செல்லவிருந்த தாய் லயன் (Thai Lion) ஏர் விமான அதிகாரிகள் பயணிகளிடத்தில் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொருத்தராக சோதனை செய்யப்பட்டு விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அந்த வரிசையில் பிரசாந்திடம், கவுண்டரில் இருந்த அதிகாரிகள் “உங்கள் கைப்பையில் என்ன இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
பிரசாந்தும் நாம் சொன்ன ஜோக்கிற்காக அனைவரும் வெடித்து சிரித்தது போல இவர்களும் சிரிக்கட்டும் என நினைத்து, “வெடிகுண்டு இருக்கிறது” என்று கூறி சிரித்துள்ளார்.
ஆனால் இவர் அடித்த ஜோக்கிற்கு அதிகாரிகள் சிரிக்கவில்லை. மாறாக சீரியஸானார்கள். மட்டுமல்ல... அந்த பதிலை அதிகாரிகள் பதிவு செய்ததுடன் வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டு குழுவுடன் ஒன்றுகூடி பிரசாந்தின் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.
அதன்படி பிரசாந்த் மற்றும் அவரின் குடும்பத்தினரை பாங்காக் செல்லாமல் தடுத்து நிறுத்தி அவர்களை நெடுவாசல் போலீசிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு அவர் செல்லவிருந்த விமானத்தை சோதனை செய்த வெடிகுண்டு நிபுணர்கள் அத்துடன் நிறுத்தாமல், அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த அனைத்து பயணிகளையும் சோதனை செய்தனர். இறுதியில் விமானத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு விமானத்தை பறக்க அனுமதித்து இருக்கின்றனர். இதனால் 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு பாங்காக் சென்றது.
இதில் கைது செய்யப்பட்ட பிரசாந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதுடன் அவரின் பயணமானது ரத்து செய்யப்பட்டது.