கரையான் கூகுள்
இந்தியா

கேரளா: கரையானுக்கு வீட்டை பரிசளித்து சென்ற குடும்பம்

Jayashree A

கேரளா வயநாடு பகுதியில் புல்பள்ளி என்ற கிராமத்தில் செக்காடி கட்டகண்டி என்ற காலனியைச் சேர்ந்தவர் பிந்து. இவர் தனது வீட்டை கரையான்களுக்காக விட்டுக்கொடுத்து இருக்கிறார்.... எதற்காக?

பொதுவாக வீடு என்றாலே பல்லி, கரப்பான் பூச்சி என்றும் சில புழு பூச்சிகளின் தொல்லைகள் இருக்கத்தான் செய்யும். அதுவும் மழைக்காலம் என்றால் பூச்சிகளின் தொல்லை வீடுகளில் அதிகமிருக்கும். அந்தவகையில் கரையானும் ஒன்று.

மரங்களிலும், ஈரமண்ணிலும் கரையான்கள் தனது இருப்பிடத்தை ஏற்படுத்திக்கொள்ளும். ஒரு வீட்டில் கரையான் வந்தது என்றால் அதை முற்றிலும் ஒழிப்பது என்பது கடினமான காரியம். ஒரு இடத்தில் மருந்தடித்தால் அது வேறொரு இடத்திற்கு இடம் பெயரும். இப்படி தரை, சுவர், கூரை என்று அனைத்து பகுதிகளிலும் விரைவாக பரவி வீட்டையே ஆக்கிரமித்துக்கொள்ளும். அப்படி ஒரு நிகழ்வுதான் கேரளாவிலும் நடந்தது.

புல்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிந்து. இவர் அப்பகுதியில் உள்ள செக்காடி கட்டகண்டி என்ற பஞ்சாயத்து காலனியில் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது வீட்டை கரையான் அரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால், கரையான் வந்த பகுதியை தினமும் அவர்கள் சுத்தம் செய்ய... மறுநாள் வேறொரு இடத்திற்கு கரையான் அதிகமாக வரத்தொடங்கி இருக்கிறது. இப்படி மாற்றி மாற்றி அவர்கள் சுத்தம் செய்து வந்தாலும் கரையானை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒரு கட்டத்தில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் அளவிற்கு, கரையான் அவர்கள் வீட்டின் வராண்டா, கூடம், அறைகள் என்று பரவ ஆரம்பித்துள்ளது. இதனால், அவர்களால் அந்த வீட்டில் தொடர்ந்து வசித்து வர இயலாத சூழல் ஏற்பட்டு அவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். இப்போது அவர்கள் வீடு உள்ளே நுழையமுடியாதபடி கரையான் புற்றால் மூடப்பட்டு இருக்கிறது.

தெய்வீக சக்தியின் காரணமாகத்தான் இந்த கரையான்கள் அவ்வீட்டை ஆக்கிரமித்துள்ளது என்று கூறும் அப்பகுதி மக்கள் அவ்வீட்டை தெய்வமாக வழிபட்டு வருவதுடன், விஷேஷ நாட்களில் அவ்வீட்டிற்கு தீபாராதனை மற்றும் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.