“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
கேரளாவில் சிகிச்சைக்கு வந்த விசாரணைக் கைதி ஒருவர் மருத்துவ மாணவியைத் தாக்கியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொட்டக்கார பகுதியைச் சேர்ந்தவர் பள்ளி ஆசிரியர் சந்தீப். மதுவுக்கு அடிமையான இவர் தன் வீட்டின் அக்கம் பக்கத்தினருடன் எப்போதும் சண்டையில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதேபோன்று நேற்று இரவும் குடித்துவிட்டு பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தகாராறில் ஈடுபட்டுள்ளார். சந்தீப்பின் செயல் எல்லை மீறியதால் அவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவலர்கள் சந்தீப்பை கைதுசெய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், மருத்துவ பரிசோதனை மற்றும் காயத்துக்குச் சிகிச்சை அளிக்கக் காவலர்கள் சந்தீப்பை இன்று காலை கொட்டாரக்கார தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இறுதியாண்டு மருத்துவம் படிக்கும் வந்தனா தாஸ் என்ற பெண் மருத்துவர், சந்தீப்புக்குச் சிகிச்சை அளித்துள்ளார். அவர் சந்தீப்பின் உடலில் இருக்கும் காயங்களுக்கு ட்ரெஸ்ஸிங் செய்துகொண்டிருந்தபோது திடீரென சந்தீப், வந்தனாவை தாக்கியுள்ளார். குற்றவாளி சந்தீப் தனக்கு அருகில் இருந்த மருத்துவ கத்தரிக்கோலால் மருத்துவரின் முதுகு மற்றும் வயிற்றில் ஆழமாகக் குத்தியதால் மருத்துவ வந்தனா படுகாயம் அடைந்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக சந்தீப்பை பிடிக்க முயன்றனர். அப்போது சந்தீப் போலீசாரையும் மற்ற மருத்துவமனை ஊழியர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனையடுத்து கொட்டாரக்கார போலீசார் சந்திப்பை அங்கிருந்து தாக்கி இழுத்துச் சென்றுள்ளனர்.
இதனிடையே, ஆசிரியர் சந்தீப்பால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்த மாணவி வந்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசுமருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள் என அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு குற்றவாளியை, குற்றம்சாட்டப்பட்டவரை வெளியில் அழைத்து வரும்போது அவருக்கு கைவிலங்குகள் அணிவிக்கவேண்டும் என்பது விதி. ஆனால் போலீஸார் அதை செய்யவில்லை என மருத்துவ சங்கங்கள் போலீசார்மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள காவல்துறையினர், ”சந்தீப்பை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்படும் போதும் மிகவும் அமைதியாகவே இருந்தார். அதனாலேயே அவரை தனியாகச் சிகிச்சை அறையில் விட்டுவிட்டு நாங்கள் வெளியில் நின்றோம். ஆனால் சந்தீப்பின் உறவினர் பினு அவரிடம் பேச முயன்றபோதுதான் அவர் திடீரென வன்முறையில் ஈடுபட்டார். முதலில் அவரது உறவினரைத் தாக்கி விட்டு பிறகு மருத்துவர் வந்தனா மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளார்” என கூறியுள்ளனர்.
இறந்த மருத்துவ மாணவி வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குக் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் நேரில் வருகை தந்துள்ளனர். மேலும், மருத்துவர் வந்தனா தாஸ் கொலைக்கு நீதி கேட்டு இந்திய மருத்துவ சங்கம், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-