போலிசார் தேடுதல் சமயத்தில் கூகுள்
இந்தியா

கேரளா| மகளை காணாமல் 48 மணிநேரம் பரிதவித்த பெற்றோர்; தமிழ்நாட்டில் ஒலித்த குரல்.. இறுதியில் ட்விஸ்ட்!

Jayashree A

அசாமைச்சேர்ந்த ஒரு குடும்பம் பிழைப்பைத்தேடி கேரளா வந்ததுடன், கேரளாவில் உள்ள கஜகோமாட்டில் இருக்கும் ஒரு பள்ளியில் கடந்த ஒரு வருடமாக விவசாய வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகிறார்கள். ஆனால், இவர்கள் தங்களின் வாழ்க்கையில் கடந்த 48 மணி நேரத்தை எப்பொழுதும் மறக்கமுடியாதபடி ஒரு சம்பவத்தை அனுபவித்துள்ளார்கள் அது என்ன என்பதை பார்க்கலாம்..

அசாமை சேர்ந்த குடும்பம் ஒன்று தனது குழந்தைகளுடன் வறுமையில் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்கு தெரிந்தவர்கள், கேரளா சென்றால் வேலை கிடைக்கும் என்ற தகவலை அடுத்து அந்த குடும்பம் தனது இரு பெண் குழந்தைகளுடன் கடந்த வருடம் கேரள வந்து அங்கிருக்கும் கஜகோமாட் என்ற இடத்தில் தங்கி விவசாய வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பெற்றோர்கள் வேலைக்கு செல்ல... அவர்களின் இரு பெண் குழந்தைகளும் வீட்டில் இருந்துளனர். இதில் குழந்தைகள் இருவருக்கும் இடையே அவ்வப்போது சிறு தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் கொண்ட பெற்றோர், சம்பவதினத்தன்று 13 வயது நிரம்பிய பெரிய பெண்ணை கண்டித்து அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த 13 சிறுமி, கையில் 40 ரூபாயுடன் வீட்டைவிட்டு வெளியேறி சென்றிருக்கிறார். இவருக்கு அசாம் மொழியைத்தவிர வேறு மொழி தெரியாது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நீண்ட நேரமாக வெளியில் சென்ற தனது பெண்ணை காணாததால் பெற்றோர்கள் கவலையுடன் தேடத்துவங்கி இருக்கின்றனர்.

கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, கேரளாவிலிருந்து ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். ரயிலில் இப்பெண் மொழி ஏதும் தெரியாத நிலையில் தனியாக பயணம் செய்ததை தெரிந்துக்கொண்ட மருத்துவ கல்லூரி மாணவியான பபிதா அச் சிறுமியை தனது மொபைலில் படம் எடுத்து இருக்கிறார். மேலும் அச்சிறுமியிடம் பேசவும் முயன்றுள்ளார். ஆனால் அச்சிறுமி தனது உறவினர்கள் அடுத்த பெட்டியில் இருப்பதாக சிறுமி கூறவும், அம்மருத்துவ மாணவியும் தனது ஊருக்கு சென்றுவிட்டார்... இது இப்படி இருக்க... இச்சிறுமியைக்காணாத அவரது குடும்பம் பரிதவித்ததுடன் அருகில் இருக்கும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து காவலர்கள் மிகவும் முயற்சி செய்து காணாமல் போன அசாம் சிறுமியைத் தேடத்துவங்கினர்.

ஆரம்பத்தில் உள்ளூரில் தேடத் துவங்கிய போலிசாருக்கு அச்சிறுமியை சிலர் ரயில் நிலையத்தில் பார்த்ததாக தகவல் வந்ததை அடுத்து, அனைத்து ரயில் நிலையங்களும் உஷார் செய்யப்பட்டது. மொழி தெரியாத சிறுமியை யாராவது கடத்தக்கூடும் என்ற அச்சத்தில் தேடுதல் முயற்சியானது மிகவும் தீவிரமடைந்தது. உடனடியாக அச்சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைதளம் செய்திகளில் வெளியிட்டு இச்சிறுமியை கண்டால் தகவல் தெரிவிக்கவும் என்று விளம்பரம் படுத்தப்பட்டது. சிறுமியின் பெற்றோர் மிகவும் கவலையுடன் பரிதவித்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், வலைதளங்களில் காணாமல் போன சிறுமியின் விளம்பரத்தை பார்த்த மருத்துவகல்லூரி மாணவி பபிதா, தான் அச்சிறுமியை எடுத்த புகைப்படத்தை போலிசாருக்கு அனுப்பி, கன்னியாகுமரி ரயிலில் சிறுமியை சந்தித்தது குறித்து தகவல் கொடுத்துள்ளார். மாணவி கொடுத்த புகைப்படத்தை முக்கிய ஆதாரமாகக்கொண்டு போலிசார் அச்சிறுமியை சல்லடைப்போட்டு தேடத்துவங்கினர். இறுதியில் சென்னை தாம்பரத்திலிருந்து வங்காளம் செல்ல இருந்த ரயிலில் ஒரு பெட்டியில் சில ஆண்களுக்கு மத்தியில் அச்சிறுமி பொதுப்பெட்டியில் இருந்தது தெரியவந்ததை அடுத்து போலிசார் அந்த ஆண்களை விசாரித்து, அச்சிறுமியை மீட்டு கேரளா கூட்டிச்சென்றனர்.

கல்லூரி மாணவி, காணாமல் போன சிறுமி

அச்சிறுமியிடம் போலிசார், “ஏன் வீட்டை விட்டு வெளியேறினாய்?” என்ற கேள்வி எழுப்பிய பொழுது, பெற்றோர்கள் அடித்ததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார். இதை அடுத்து அவரது பெற்றோருக்கு ஆறுதலுடன் அட்வைசையும் செய்துள்ளனர் போலிசார்.

குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில், தனது தவறை உணர்ந்த பெற்றோர், இனி குழந்தைகளை அடிக்கமாட்டேன், என்று கூறியதுடன், இரண்டு நாட்களாக பட்னி கிடந்த தனது மகளுக்கு பிடித்த உணவை செய்து கொடுத்து இருக்கிறார்கள். இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாமல் பசியால் இருந்த அச்சிறுமி, பசியுடன் உணவை சாப்பிட்டதை பார்த்த பெற்றோர் கண்ணீர் வடித்தனர். மேலும் போலிசாரிடம் அவர்கள் தனது குழந்தையை கண்டுபிடித்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்ததுடன், மீண்டும் தாங்கள் அசாமிற்கே சென்றுவிடுவதென முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

என்னதான் வேலை இருந்தாலும் பெற்றோர்கள் ஒரு நாளைக்கு குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களிடம் பேசவேண்டும், அவர்கள் விருப்பு வெறுப்பு என்ன என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும். அவர்கள் மனதில் இருக்கும் குறைகளை காதுக்கொடுத்து கேட்கவேண்டும். இதை இக்கால கட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் செய்ய தவறிவிடுகின்றனர். இதன் பிறகாவது ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கான நேரத்தை ஒதுக்கி அவர்களை நல்ல பாதையில் அழைத்து செல்லவேண்டும் என்பதற்கு இச்செய்தி ஒரு பாடமாக இருக்கட்டும்..