குற்றம் சாட்டப்பட்ட மனு ட்விட்டர்
இந்தியா

கேரளா: பயிற்சி அளிப்பது போல் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிக்கெட் கோச் போக்ஸோவில் கைது!

Jayashree A

விளையாட்டுத் துறைகளில் இன்றைய பெண்கள் பிரகாசமாக ஜொலிக்கின்றனர். ஆனால் அதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டம் கொஞ்சம் நஞ்சம்ல்ல. போராட்டம் என்றால், பயிற்சி மட்டுமல்ல... புற போராட்டங்களும்தான். தங்களின் சுயநலத்திற்காக பெண்களை முன்னேறவிடாமல் தடுப்பதுடன், அவர்களுக்கு பல தொல்லைகள் கொடுப்பவர்கள் இங்கே அதிகம். ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைக்கும் செய்திகளே அதற்கு சாட்சி.

தற்பொழுது ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இறுதிச்சுற்று வரை சென்று, எடை காரணமாக கடைசி நேரத்தில் திடீர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் கடந்த கால வாழ்க்கை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

வினேஷ் போகத்

வினேஷ் போகத் தனக்கு என்ன கொடுமை நடந்தது எனக்கூறி வீதியில் இறங்கி போராடினாரோ, அதேபோன்ற கொடுமைகள் கேரளாவில் தற்பொழுது சில சிறுமிகளுக்கு நடந்துள்ளது. அச்சம்பவத்தின்படி கேரளாவில் கிரிக்கெட் சங்க பயிற்சியாளரான மனு என்பவர் தன்னிடம் பயிற்சிக்கு வரும் சிறுமிகளிடம் உடல் தகுதித்தேர்வு என்ற பெயரில் அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுப்பதுடன், அவர்களை பாலியல் சீண்டலுக்கும் உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மனுவிற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மற்ற சிறுமிகளின் பெற்றோர்களும் தைரியமாக முன்வந்து மனுவிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை 7 சிறுமிகளின் பெற்றோர்கள் வழக்குப் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர், போக்ஸோவில் மனுவை கடந்த மாதம் கைது செய்தனர். தொடர்ந்து தற்போது மனுவிற்கு எதிரான ஆதாரங்களை திரட்டி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கை குற்றப்பிரிவு வசம் ஒப்படைக்கவும் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் உயர் அதிகாரிகளின் கண்காணிப்பில் விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பயிற்சியாளர் மனு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றம்

மேலும் போலீஸார் தாக்கல் செய்த மனுவில், பயிற்சியாளர் மனுவின் கைப்பேசியில் உள்ள சிறுமிகளின் படங்கள் வேறு யாருக்கும் அனுப்பப்படவில்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆகவே மனு மட்டுமே குற்றவாளி என்று அவர்கள் கூறியுள்ள நிலையில் இந்த வழக்கைப்பற்றி மேலும் விசாரித்து வருகின்றனர்.