கேரளா சிபிஎம் அனில் குமார் ட்விட்டர்
இந்தியா

’ஹிஜாப்பைக் கைவிடும் இஸ்லாமிய பெண்கள்’ - சர்ச்சையைக் கிளப்பிய கேரளா சிபிஎம் பிரமுகர்!

கடந்த காலங்களில் ஹிஜாப் விவகாரம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரளாவில் சி.பி.எம். பிரமுகர் ஒருவர், ஹிஜாப் பற்றிப் பேசியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

அண்டை மாநிலமான கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி திருவனந்தபுரத்தில் 'எசென்ஸ் குளோபல்' என்ற கடவுள் மறுப்பு கொள்கை மாநாடு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர் அனில் குமார் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், ’மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு காரணமாகவே, முஸ்லிம்கள் அதிகம் உள்ள மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள், ஹிஜாப் அணியும் வழக்கத்தைக் கைவிட்டுள்ளனர்’ எனப் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய இந்தக் கருத்து, இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே இரண்டு பிரிவுகளைத் தயாராக வைத்திருக்கும். ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் கடவுள் நம்பிக்கையை எதிர்த்துப் பேசுவர். மற்றொரு பிரிவினர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் கூட்டங்களில் பங்கேற்று அவர்களைப் புகழ்ந்து பேசுவர். அனில் குமாரின் பேச்சு, கம்யூனிஸ்ட் கட்சியினரின் உண்மையான முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. தவிர, மலப்புரத்தில் இஸ்லாம் பெண்கள் யாரும் ஹிஜாப் அணிவதை கைவிடவில்லை. இன்றைய தலைமுறையினர்கூட ஹிஜாப் அணிகின்றனர்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ”தொந்தரவு செய்யாதீர்கள்” - வேண்டுகோள் விடுத்த விராட் கோலி, அனுஷ்கா சர்மா!

அதேநேரத்தில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் எம்.வி.கோவிந்தன், ‘ஆடை தேர்வு என்பது தனிப்பட்ட விருப்பம். நம் அரசியலமைப்பு அளித்துள்ள ஜனநாயக உரிமையின் அங்கம். எனவே, அந்த விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்குக்கூட உரிமை இல்லை.

சிபிஎம்

கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான பிரச்னை எழுந்தபோதே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் தரப்பை தெளிவுபடுத்தி உள்ளது. அனில் குமார் தற்போது பேசியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கும், கட்சியின் கொள்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’ என தெளிவுப்படுத்தி உள்ளார்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா: அரசு மருத்துவமனை டீனை கழிவறையைச் சுத்தம் செய்யச் சொன்ன எம்.பி.! #viral video