வீட்டை பூட்டிவிட்டு சாவியை வராண்டாவில் வைத்துச் சென்ற தம்பதி, செல்லும் வழியில் குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவை உலுக்கி வருகிறது.
கேரளாவை அடுத்த திருவல்லாவில் கடந்த இரு தினங்களுக்கு முன் சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அச்சமயம் அவ்வழியே ரோந்து சென்ற போலீஸார், முதலில் அது குப்பை மேடு எரிகிறது என்று நினைத்தனராம். பிறகு அதன் அருகில் சென்ற சமயம் அது கார் என்பதை தெரிந்து கொண்டு அதை ஆய்வு செய்தனர். அதற்குள் காரானது முற்றிலுமாக எரிந்துள்ளது. காரின் முன் இருக்கையில் இருவர் சடலமாக கிடந்துள்ளனர்.
முதலில் விபத்து என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அதனால் விபத்திற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள அந்த காரின் எண்ணை கொண்டு விசாரணையை ஆரம்பித்தனர். அதன்படி அந்த காரானது, திருவல்லா பேரூராட்சியை சேர்ந்த ராஜூ தாமஸ் ஜார்ஜ் (69) என்பவருக்கு சொந்தமானது என்றும், காரில் இறந்து கிடந்தவர்கள் ராஜு தாமஸ் ஜார்ஜூம் அவரது மனைவி லைஜி (63) என்பதும் தெரியவந்தது.
அடுத்தடுத்தகட்ட விசாரணையில், ராஜூ கடந்த 25 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்ததும், சில ஆண்டுகளுக்கு முன்தான் கேரளா திரும்பி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்களின் வீட்டிற்கு சென்ற போலீஸார் வீடு பூட்டியிருப்பதை கண்டனர். மேலும் வீட்டு சாவியானது அங்கிருந்த வராண்டாவில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் வீட்டை திறந்து சோதனையிட்டனர்.
அப்பொழுது கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் தங்களின் குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் தற்கொலை செய்துக்கொள்வதாக எழுதப்பட்டிருந்ததை அடுத்து, இருவர் இறப்பும் விபத்து அல்ல... தற்கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இருப்பினும் இவர்கள் எதனால் தற்கொலை செய்து கொண்டனர் என்ற விவரம் தெரியவரவில்லை
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.