கேரளத்தில் 1987-ல் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வு மீண்டும் ஷைலஜா டீச்சர் விவகாரத்தின் மூலமாக தற்போதும் நிகழ்ந்துள்ளது. அந்த வரலாற்றை சற்று திரும்பி பார்ப்போம்.
அண்மையில் முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 99 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கிறது இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி. மீண்டும் முதல்வராக வரும் வியாழன் அன்று பொறுப்பேற்க உள்ளார் பினாராயி விஜயன். அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்க உள்ளனர். முதல்வர் பினராயி விஜயனை தவிர கடந்த ஆட்சியில் அமைச்சரவையில் இடம்பெற்ற ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கக்கப்படவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவின்படி இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்தவர்களுக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை. நிபா மற்றும் கொரோனா வைரஸ் தொற்றை திறம்பட கையாண்ட முன்னாள் கேரள சுகாதாரத்துறை அமைச்சராக (2016 - 21) இருந்த ஷைலஜா டீச்சருக்கு அமைச்சராகும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது பேசுபொருளாக மாறியது.
ஆனால், ``இது எங்கள் கட்சியின் கொள்கை முடிவு. எனவே அந்த முடிவின்படி நானும் விலக முடிவு செய்தேன். எல்லோரும் ஒரு புதிய பொறுப்பு வரும்போது அவர்கள் புதியவர்கள்தான். புதியவர்கள் பொறுப்பேற்க வருவது வரவேற்கத்தக்க ஒன்று. அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். கடந்த முறை எங்கள் கட்சி என்னை அமைச்சராக தேர்வு செய்தது. அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அதே நேரத்தில் திறம்பட பணியாற்றும் பலர் கட்சியில் உள்ளனர். இது நல்ல முடிவு. நாங்கள் மற்றவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இங்கே எங்கள் கட்சியில் உள்ள பல தொழிலாளர்கள் வாய்ப்பு கிடைத்தால், அவர்களும் கடுமையாக உழைப்பார்கள்" என்று கட்சியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார் ஷைலஜா டீச்சர்.
இந்த சம்பவம் நடந்த இதே வாரத்தில் கேரளத்தின் இடதுசாரி தலைவர்களில் ஒருவரான கே.ஆர்.கௌரி அம்மா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இது எதிர்பாராமல் நடந்த சம்பவம். ஆனால், இந்தத் தருணத்தில் கௌரி அம்மாவுக்கு நிகழ்ந்ததையும் ஷைலஜாவுக்கு நிகழ்ந்ததையும் பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியம். கெளரி அம்மா 1957-இல் அமைக்கப்பட்ட இ.எம்.எஸ் அமைச்சரவையில் கேரளாவின் முதல் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர்.
அப்போது இருந்தே படிப்படியாக கேரள அரசியல் தனிப்பெரும் தலைவராக வளரத் தொடங்கினார். 1987-ஆம் ஆண்டில் கௌரி அம்மா அடுத்த முதல்வராக இருப்பார் என்று கணிக்கப்பட்டது. அதற்கேற்பவே அவரது பெயரை முன்னிறுத்தியே பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இருந்து பிரபல வசனம் `கேரள நாடை கே.ஆர்.கௌரி பரிக்கட்டே' என்பதுதான். அதாவது கேரளாவை கே.ஆர்.கௌரி ஆளட்டும் என்பது தான் அதன் பொருள்.
பிரசாரத்துக்கு நல்ல பலனும் இருந்தது. தேர்தலில் இடதுசாரிகள் வெற்றி பெற்றனர். ஆனால் கௌரி அம்மா முதல்வராக மாறவில்லை என்பது மட்டுமல்லாமல், பின்னர் உட்கட்சி பூசல் காரணமாக அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், அவர் ஏன் நீக்கப்பட்டார் என்பதற்கு இப்போது வரை பதில் இல்லை.
எனினும், அவர் வெளியேற்றப்பட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது கேரளத்தில், அமைச்சரவையை மாற்றியமைக்க பலவீனமான சாக்குப்போக்குடன் ஒரு பெண் தலைவர் அமைச்சரவையில் இருந்து விலக்கப்படுவது வரலாறு மீண்டும் ஷைலஜா விவகாரத்தில் நிகழ்ந்துள்ளது. கேரளத்தில் பெண் முதல்வர்கள் இதுவரை வந்ததில்லை என்ற குறை இப்போது வரை இருக்கிறது. முதல்வராவதற்கு தகுதியானவர்களாக வர்ணிக்கப்பட்ட பெண்களில் அன்று கௌரி அம்மாவும், இன்று ஷைலஜா டீச்சரும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.