விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் இந்தியில் தயாரான திரைப்படம், 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம், இந்தியில் கடந்த ஆண்டு மே மாதம் வெளியான நிலையில் கடும் எதிர்ப்பினை பெற்றது. இந்தி மட்டும் அல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் அந்தந்த மாநிலங்களில் கடும் எதிர்ப்பினை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் திரையிடப்பட்டது.
மேற்கு வங்காளத்தில் இப்படத்தினை வெளியிட தடையும் விதிக்கப்பட்டது. தடை குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “ ‘தி கேரளா ஸ்டோரி’ திரிக்கப்பட்ட கதையாக வெளியாகியிருக்கிறது. தி காஷ்மீரி வைல்ஸ், தி கேரளா ஸ்டோரி படங்களுக்கு பாஜக-தான் நிதியுதவி செய்துள்ளது. பாஜக ஏன் வகுப்புவாத அரசியலை உருவாக்குகிறது?" என்று கடுமையாக சாடியிருந்தார்.
இருப்பினும் இத்திரைப்படம் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்தாக கூறப்பட்டது.
இத்திரைப்படம் கேரள பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் திட்டமிடப்பட்டு இணைக்கப்படுகின்றனர் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ‘தி கேரளா ஸ்டோரி’ ஒளிப்பரப்படவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘உலகையே உலுக்கிய கேரளாவின் கதை!’ என்ற தலைப்பின்கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையடுத்து இத்திரப்படத்தினை தொலைக்காட்சியில் திரையடக் கூடாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிக்கு, கடும் எதிர்ப்பினை அவர் பதிவுசெய்துள்ளார். இது குறித்து கேரள முதல்வர் தன் x பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“பிரிவினை வாதத்தினை முன்வைக்கும் ”தி கேரள ஸ்டோரி” திரைப்படத்தை டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது என்ற முடிவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேசிய அளவிலான ஒரு ஒளிப்பரப்பு நிறுவனம் (டிடி நேஷனலை சாடி), பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியின் பிரசார இயந்திரமாக மாறக்கூடாது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில், வகுப்புவாத பதற்றங்களை அதிகப்படுத்த முயலும் இதுபோன்ற திரைப்படத்தை நிச்சயம் திரையிடக்கூடாது. இத்தகைய வெறுப்பை விதைக்கும், தீங்கிழைக்கும் முயற்சிகளை எதிர்ப்பதில் கேரளா என்றும் உறுதியாக இருக்கும்” என்றுள்ளார். இதையடுத்து கேரளா ஸ்டோரி திரைப்பட சர்ச்சை, மீண்டுமொரு வெடித்துள்ளது.