இந்தியா

கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்திய பெண் போலீஸ் அதிகாரி - கேரள முதல்வர் கண்டனம்

கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்திய பெண் போலீஸ் அதிகாரி - கேரள முதல்வர் கண்டனம்

webteam

திருவனந்தபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்திய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையம் மீது ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பெண் ஐ.பி.எஸ். அதிகாரி சைத்ரா தெரசா விசாரித்து வந்தார்.

இதனால் கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு போலீசாருடன் திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சென்ற சைத்ரா, அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டார்.

ஆனால் யாரையும் கைது செய்யவில்லை. இதனால் மாவட்ட தலைவர்கள், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து சைத்ராவுக்கு எதிராக துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பெண் போலீஸ் அதிகாரி சைத்ரா உடனடியாக சட்டம் ஒழுங்கு துணை காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து பெண்கள் பிரிவு சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்திய சைத்ராவுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபடுவோரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலர் சுயநலத்துடன் செயல்படுவதாகவும், ஜனநாயக சமூகத்தில் கட்சி அலுவலகங்கள் சுமுகமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.