கேரள சட்டசபையில் புதிய எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்தார்.
பராவூர் தொகுதியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வாகியிருக்கும் சதீசனின் 'முன்மாதிரியான' சட்டசபை செயல்திறனை முதல்வர் பினராயி விஜயன் பாராட்டினார். "மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். சதீசன் எப்போதும் எதிர்க்கட்சி வரிசையில் ஒரு குறிப்பிடத்தக்க முகமாக இருந்து வருகிறார். அவர் எதிர்க்கட்சியின் சிறந்த தலைவராக இருப்பார் என்று நம்புகிறேன் " என அவர் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் 99 இடங்களை வென்றதன் மூலம் இரண்டாவது முறையாக சிபிஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் ஆட்சியமைத்தது. மாநில சட்டசபையில் 41 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் எதிர்க்கட்சியாக உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலாவுக்கு பதிலாக தற்போது சதீசன் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.