இதய தானம் செய்திருந்த தன் இறந்த தந்தையின் இதயத்துடிப்பை கேட்ட சிறுவன் ட்விட்டர்
இந்தியா

“என் அப்பாவோட இதயத்துடிப்பை ஒருமுறை கேட்கலாமா அங்கிள்...” - கண்களை குளமாக்கும் ஒரு கேரள ஸ்டோரி!

கேரளாவில் கோழிக்கோடு மைத்ரா மருத்துவமனையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் இதயதுடிப்பை ஐந்து வயது சிறுவனான ஆத்விக் ஸ்டெதாஸ்கோப் மூலம் கேட்கிறார். இதுதான் புகைப்படம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் கண்ணீர் கதை என்னவென்று தெரியுமா?

Jayashree A

கேரளாவில் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பிலீஷ். இவருக்கு சிந்து என்ற மனைவியும், ஆத்விக் என்ற குழந்தையும் உண்டு. ஆத்விக் பிறந்த சில ஆண்டுகளிலேயே, அவரது தந்தை பிலீஷ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி பிலீஷ் மூளைச்சாவு அடைந்துள்ளார்.

இதய தானம் செய்திருந்த தன் இறந்த தந்தையின் இதயத்துடிப்பை கேட்ட சிறுவன்

அதே சமயத்தில், கேரளாவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த குமரன் இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது மூளைச்சாவு அடைந்த பீலிஷின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் பரிந்துரைத்துள்ளனர். குடும்பத்தினரும் சம்மதித்துள்ளனர். இதனால் பீலிஷின் உடல் உறுப்புகள் அனைத்தும் தானம் கொடுக்கப்பட்டன. இதில் பீலிஷின் இதயம், இன்ஸ்பெக்டர் குமரனுக்குப் பொருத்தப்பட்டு அவர் உயிர் பிழைத்திருக்கிறார்.

இச்சம்பவம் முடிந்து ஒருவருடமான நிலையில், பீலிஷை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய நினைத்த இன்ஸ்பெக்டர் குமரன், தனது சகாக்களின் உதவியுடன் சில ஏற்பாடுகளை செய்துள்ளார். அதன்படி அவர்கள் அனைவரும் இணைந்து பீலிஷின் குடும்பத்தினருக்கு நிதி திரட்டியுள்ளனர்.

அதை அளிப்பதற்காகவும், மருத்துவர்களை கௌரவிப்பதற்காகவும் ஒரு ஏற்பாட்டை செய்திருந்தார் குமரன். அதில் மைத்ரா மருத்துவமனை மருத்துவர்கள், பிலீஷ் குடும்பத்தினர் மற்றும் இதயமாற்று அறுவைகிசிச்சை செய்துக்கொண்ட இன்ஸ்பெக்டர், நண்பர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

இதய தானம் செய்திருந்த தன் இறந்த தந்தையின் இதயத்துடிப்பை கேட்ட சிறுவன்

அப்பொழுது, தனது அப்பாவின் இதய துடிப்பின் சத்தத்தை கேட்கவேண்டும் என்று ஆசைப்பட்ட ஆத்விக், மருத்துவரை கேட்க.... மருத்துவர் ஆத்விக்கின் சிறு ஆசையை நிறைவேற்றும் விதமாக ஸ்டெதாஸ்கோப்பினால் இன்ஸ்பெக்டரின் (தந்தையின்) இதய ஒலியை கேட்க வைக்கிறார். இந்த காட்சி காண்பவர்களின் கண்களை கலங்கடித்துள்ளது.