கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த சமூகமே ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் தருணத்தில், ஊடகத்துறையில் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்றவை கூடாது எனக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இக்கட்டான சூழலில் பணியாற்றிவரும் கேரள ஊடகப் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதி அளித்தார். கொரோனா பெருந்தொற்று ஊடகத் துறையினரைப் பெரிதும் பாதித்திருப்பதாகக் கூறிய பினராயி விஜயன், விளம்பரங்கள் குறைந்து போனதால் பல நாளேடுகளின் பக்கங்கள் குறைந்துவிட்டதாகக் கூறினார்.
கொரோனா தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பணியில் இருக்கும் ஊடகத் துறையினர் மிகப் பெரும் ஆபத்தில் இருப்பதை மறுக்க முடியாது என அவர் குறிப்பிட்டார். சில மாநிலங்களில் செய்தியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பது தொடர்பான செய்திகள் தனது கவனத்துக்கு வந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
நெருக்கடியான இக்காலகட்டத்தில் கொரோனாவின் அச்சுறுத்தலையும் மீறி களத்தில் நின்று செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளர்கள் போற்றத்தக்கவர்கள் என்று அவர் கூறியுள்ளார். சுகாதாரப் பணியாளர்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றும் ஊடகத் துறையில் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்றவை கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ர்.