குற்றம் PT
இந்தியா

”உங்கள் பெற்றோருக்கு ஆபத்து இருக்கு” - குழந்தைகளை நம்பவைத்து ஏமாற்றி நகைகளைப் பறித்து சென்ற நபர்!

Jayashree A

குழந்தைகளிடம் சாக்லெட் மிட்டாய் வாங்கிக்கொடுத்து அவர்கள் அணிந்திருந்த கொலுசு, காதணிகளை திருடும் செய்திகளை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் வீட்டில் அசம்பாவிதம் நடக்க இருக்கிறது. அதை என்னால் தடுக்கமுடியும் என்று குழந்தைகளின் மனதை சஞ்சலப்படுத்தி அவர்கள் மூலம் நகைகளை திருடி சென்றுள்ளார் கேரளாவில் ஒருவர்...

தேனி பெரியகுளத்தைச் சேர்ந்தவர் பூபதி. கேரளாவில் ஏலப்பாறை என்ற பகுதிக்கு சென்றவர், அங்கிருந்த ஒரு வீட்டை கண்ணோட்டம் விட்டுள்ளார். அவ்வீட்டில் குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். இதை தெரிந்துக்கொண்ட பூபதி குழந்தைகளிடம் பேச்சுக்கொடுத்து இருக்கிறார்.

அத்துடன் குழந்தைகளிடம், உங்கவீட்டில் அசம்பாவிதம் நடக்க போகிறது. உங்க பெற்றோருக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்று குழந்தைகள் மனது சஞ்சலப்படும்படி பேசியுள்ளார். இவரின் பேச்சை உண்மை என்று நம்பிய குழந்தைகள் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்கவும், நான் அதற்கு பூஜை செய்கிறேன், அதற்கு 4000 ரூபாய் செலவாகும் என்று கூறியிருக்கிறார்.

குழந்தைகள் வீட்டினுள் சென்று பணம் இருக்கிறதா என்று பார்த்திருக்கிறார்கள். பணம் ஏதும் இல்லாமல் போகவே, மீண்டும் பூபதியிடம், பணம் இல்லாத செய்தியை கூறியிருக்கின்றனர். அதற்கு பூபதி, பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை, உங்கள் காது கைகளில் இருக்கும் தங்க நகைகளைக் கொடுங்கள் என்று கேட்டு இருக்கிறார்.

தங்களின் பெற்றோருக்கு ஆபத்து ஏதும் ஏற்படக்கூடாது என்று பயந்த குழந்தைகள் தங்களிடமிருந்த தங்க நகைகளை பூபதியிடம் கொடுத்துள்ளனர். அதை வாங்கிக்கொண்டு பூபதியும் அவ்விடம் விட்டு சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் குழந்தைகள் ஏமாந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூபதியை தேடி கண்டுபிடித்து போலிஸிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.