உயிரிழந்த சிறுவன் ட்விட்டர்
இந்தியா

கேரளா: தானியங்கி கதவில் சிக்கி சிறுவன் மரணம்... செய்தியை கேட்ட பாட்டியும் உயிரிழந்த சோகம்!

கேரளாவில் தானியங்கி கதவில் சிக்கிக்கொண்ட 9 வயது சிறுவன் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் அவரது பாட்டியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினிரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Jayashree A

கேரளா மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது திரூர். இங்கு அப்துல் கஃபூர், சஜிலா என்ற தம்பதி தங்களின் 9 வயது மகன் முகம்மது சினானுடன் வசித்து வந்துள்ளனர். முகம்மது சினான், தினமும் பக்கத்து வீட்டைக் கடந்து அப்பகுதியில் உள்ள மசூதிக்கு தனியாக செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அப்படி சம்பவ தினத்தன்றும் முகம்மது பக்கத்துவீட்டை கடந்து மசூதிக்கு சென்றுள்ளார். அச்சமயத்தில் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள் ஹஜ் பயணம் சென்றிருக்கிறனர்.

ஆளில்லாத அந்த வீட்டு வழியாக சிறுவன் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அந்த வீட்டின் தானியங்கி கதவில் சிறுவன் முகம்மது சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது அப்பகுதியை கடந்து சென்ற சிலர் சிறுவன் தானியங்கி கதவிடுக்கின் இடையே சிக்கிக் கொண்டிருப்பதை பார்த்து, அவரை மீட்டுள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் முகம்மது ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சிறுவனின் பாட்டி ஆஸ்யா அருகில் உள்ள கல்லாங்காட்டு குழியில் வசித்துவருவதாக கூறப்படுகிறது. பேரன் முகம்மதுவின் இறந்த செய்தியை கேட்டதும் துக்கம் தாளாமல் பாட்டியும் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். ஒரே சமயத்தில் அப்துல் கஃபூரின் வீட்டில் இரு உயிரிழப்பு ஏற்பட்டது அப்பகுதியினிரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.