கேரளாவைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவர் பழைய செய்தித் தாளைப் பயன்படுத்தி அச்சு அசல் ரயில் மாதிரியான ஒரு உருவ பொம்மையை உருவாக்கியுள்ளது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அத்வைத் கிருஷ்ணா. இந்த மாணவர் திரிச்சூரில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த இளம் வயதில் இருந்தே இவருக்கு ரயில் மீது அலாதியான ஆர்வம் இருந்து வருகிறது. அந்த ஆர்வத்தால் இவர், வெறும் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பழைய செய்தித்தாள்களைப் பயன்படுத்தி அச்சு அசல் நீராவி என்ஜினில் இயங்கும் ரயிலை உருவாகி இருக்கிறார்.
அதன் தோற்றம் அப்படியே ரயிலை பிரதிபலிப்பதைப் போல அழகாக உள்ளது. இந்த மாணவரின் அரியச் செயலை இந்திய ரயில்வே அமைச்சகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பாராட்டியுள்ளது. மேலும், மாணவர் அத்வைத் கிருஷ்ணாவின் புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிப் போய் விடாமல் இந்தச் சிறுவன் இத்தனை கலைநயமிக்க ஒரு படைப்பை படைத்ததற்காக பலரும் அந்தப் பக்கத்தில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் அந்தப் பதிவில், “மாஸ்டர் அத்வைத் கிருஷ்ணா, காகிதத்திலான ரயில் மாதிரியை உருவாக்கியுள்ளார். இதனை அவர் செய்ய மூன்று நாள்களே தேவைப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த மற்றொரு செய்தி குறிப்பில் இந்த ரயிலின் தோற்றத்தை உருவாக்க மொத்தம் 33 செய்தி தாள்கள் தேவையானதாக கூறப்பட்டுள்ளது.