நீரில் மூழ்குதல் கோப்புப்படம்
இந்தியா

கேரளா: ஓடையில் விழுந்து உயிருக்கு போராடிய 11 வயது சிறுவன்... துரிதமாக காப்பாற்றிய மற்றொரு சிறுவன்!

கேரளாவில் ஓடையில் விழுந்த 11 வயது சிறுவனை, அங்கிருந்த இன்னொரு 11 வயது சிறுவன் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.

Jayashree A

கேரள மாநிலம் புனலூரில் எடமன் என்ற பள்ளியில் 6 வது படித்து வரும் 11 வயது மாணவர் ரோஜன். இவர் விடுமுறை தினத்தன்று மாலை 5 மணியளவில் சைக்கிள் பழக நினைத்து தனது சைக்கிளை எடுத்து ஓட்டிச்சென்றுள்ளார்.

சைக்கிள் ஓட்டிப்பழகும்பொழுது அவரது சைக்கிளானது ஒரு பள்ளத்தில் இறங்கவே, பேலன்ஸ் தடுமாறி ரோஜன் அருகில் இருந்த ஓடையில் விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஓடையிலிருந்து எழமுடியாமல் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளார்.

இச்சம்பவத்தை சற்று தொலைவில் தனது நண்பருடன் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது மாணவன் தேவநாராயணன் கவனித்துள்ளார். ஓடையில் விழுந்த சிறுவன் ரோஜன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகம் கொண்ட தேவநாராயணன் ஓடைக்கு அருகில் சென்று பார்த்துள்ளார். அங்கு சிறுவன் ரோஜன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுயநினைவின்றி இருந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ந்த தேவநாராயணன் சற்றும் யோசிக்காமல் ஓடைக்குள் இறங்கி ரோஜனை தண்ணீரில் இருந்து கரைக்கு இழுத்து வந்து கூச்சலிட்டுள்ளார்.

இவரின் கூச்சலைக்கேட்ட அப்பகுதி மக்கள் வேகமாக சென்று ரோஜனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு ரோஜன் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது ரோஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காப்பாற்றிய சிறுவன் தேவநாராயணன்

‘தக்க சமயத்தில் தேவநாராயணன் ரோஜனை காப்பாற்றவில்லை என்றால் மோசமான நிகழ்வுகளை நாங்கள் சந்திக்க நேரிட்டிருக்கும்’ என்றுகூறி அப்பகுதி மக்கள் தேவநாராயணனை பாராட்டி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தேவநாராயணனை அவரது பள்ளி நிர்வாகமும் பாராட்டி வருகிறது.