கேரளாவில், மது போதையில் யானையை வைத்து மக்களை விரட்டிய பாகனை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தில் ஏனத்தேரி பகுதி வழியாக தனியாருக்கு சொந்தமான பெண் யானையை அதன் பாகன் மது போதையில் சாலை வழியாக அழைத்துச் சென்றுள்ளார். இதை பார்த்த மக்கள் யானையை மரத்தில் கட்டிப்போடுமாறு யானை பாகனிடம் கூறியுள்ளனர்.
அப்போது மது போதையில் இருந்த யானை பாகன், யானையை வைத்து அந்த மக்களை விரட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து மக்கள் கேரள காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரையும் யானை பாகன் விரட்டியுள்ளார். தொடர்ந்து கேரள வனத்துறைக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் வனத்துறையினர் இன்னொரு யானை பாகனுடன் சம்பவ இடத்திற்கு வந்து அந்த யானையை மரத்தில் கட்டி போட்டபிறகு மது போதையில் இருந்த யானை பாகன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த நிலையில் ஆபத்தான இந்த காட்சிகளை ஒரு நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார். தற்போது இந்த காட்சி வைரலாகி வருகிறது.