வயநாடு நிலச்சரிவு கோப்புப்படம்
இந்தியா

கேரளா: வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரின் கடனை ரத்து செய்ய கேரள வங்கி முடிவு

Jayashree A

கேரளாவில் கடந்த மாதம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கு மேற்பட்டவர்கள் இறந்தது மட்டுமின்றி, பலர் வீடுவாசல்களையும் சொந்தங்களையும் இழந்து ஆதரவற்ற நிலையில் காப்பகங்களில் தஞ்சம் அடைந்தனர். இன்னும் பலர் விடுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

அரசும், பல தன்னார்வலர்களும், திரைப்பிரபலங்களும் வயநாடு பகுதியை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பல நாட்டு மக்களும் தன் நலம் பாராது அப்பகுதி மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், கேரள அரசு பாதிக்கப்பட்ட மக்களின் முழு வங்கி கடனையும் தள்ளுபடி செய்ய உள்ளதாக கூறி இருக்கிறது.

குறிப்பாக சுரல்மாலா கிளையில் கடன் பெற்று இறந்தவர்கள் மற்றும் வீடு உடைமைகளை இழந்தவர்களின் முழு கடன்களையும் தள்ளுபடி செய்வதாக வங்கி நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கேரள வங்கி, முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 2லட்சத்தை வழங்கியுள்ளது. இதைத்தவிர கேரள வங்கி ஊழியர்கள் தாமாக முன்வந்து 5 நாள் சம்பளத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். வங்கிகளின் இத்தகைய செயல்களை கேரள மக்கள் பாராட்டி வருகின்றனர்.