சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்திற்குள் உள்ள கட்டுப்பாடுகளை திரும்ப பெற வலியுறுத்தி கேரள எதிர்க்கட்சிகள் அம்மாநில சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சபரிமலை விவகாரத்தை முன் வைத்து கேரள சட்டப்பேரவையில் பாஜக, காங்கிரஸ் கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபரிமலை விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜ், பாஜக எம்.எல்.ஏ, ராஜகோபால் ஆகிய இருவரும் கருப்பு சட்டை அணிந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
சபரிமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை திரும்ப பெற கோரி எதிர்க்கட்சி எம் எல் ஏக்கள், சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து அமளியில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் அவர்கள் ஏந்தி இருந்தனர். முதலமைச்சர் பினராயி விஜயன் எழுந்து விளக்கமளிக்க முயன்றும் அதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம் எல் ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் கூட்டணி பென்னி பெஹனன் கூறுகையில், “சபரிமலையில் கோயில் வளாக பகுதியில் உள்ள தடைகளை நீக்கும் வரை எங்களது போராட்டங்களை தொடர முடிவு செய்துள்ளோம். சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.
முன்னதாக, சபரிமலை கோயில் பகுதிகளில் உள்ள தடைகளை நீக்க கேரள உயர்நீதிமன்றம் நேற்று மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.