மோகன்லால் புதியதலைமுறை
இந்தியா

வயநாடு | பாதிக்கப்பட்ட மக்களை ராணுவ சீருடையில் பார்வையிட்ட மோகன்லால் - நிதியுதவி அறிவிப்பு

ஒரே நாள் இரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் கேரள மாநிலம் வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகள் உருக்குலைத்திருக்கிறது.

Jayashree A

ஒரே நாள் இரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் கேரள மாநிலம் வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகள் உருக்குலைத்திருக்கிறது. இப்பேரிடரில் மீட்கப்பட்ட மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மேப்பாடி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், 3 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய ராணுவத்தில் லெப்டினண்ட் கர்னலாக இருக்கும் நடிகர் மோகன்லால் இராணுவ உடையில் முண்டக்கை, மேம்பாடி மற்றும் வயநாடிற்கு வந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், “வயநாட்டில் மிகவும் மனதை வருத்தக்கூடிய காட்சிகளை பார்த்தோம். சம்பவ இடத்திற்கு வந்தால்தான் அவர்களின் வலி புரியும். ஒரே நொடியில் பலர் தங்கள் சொந்தங்களையும், உறவினர்களையும் வீடுகளையும், உடைமைகளையும் இழந்திருக்கின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களுடன் நிற்பது மகத்தானது. இந்திய ராணுவம் விமானப்படை, கடற்படை, தீயணைப்பு மீட்பு படை, போலிஸ் அவரச சேவைகள் மற்றும் உள்ளூர் மக்களின் சேவைகள் குறிப்பிடத்தக்கவை. பெய்லி பாலம் இவ்வளவுகுறுகிய காலத்தில் கட்டப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. நான் கடந்த 16 ஆண்டுகளாக காலாட்படை பட்டாலியன் பிரிவில் அங்கம் வகித்து வருகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி சொல்ல இங்கு வந்தேன். இது போன்ற அவலங்கள் இனி நடக்காமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் “ என்று கூறினார்.

மேலும் முண்டகை எல்பி பள்ளி விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலம் புனரமைக்கப்படும் என்றும் கூறினார். முன்னதாக தனது விஸ்வசாந்தி அறக்கட்டளை வழியாக 3 கோடியை மேம்பாடி மற்றும் வயநாடு சீரமைப்பிற்கு வழங்குவதாகவும், பின்னர் தேவைப்பட்டால் கூடுதல் தொகை அளிப்பதாகவும் நடிகர் மோகன்லால் கூறியதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

விஸ்வசாந்தி அறக்கட்டளையானது மோகலானின் தந்தையான விஸ்வநாதன் தாய் சாந்தகுமாரி ஆகியோர் பெயரை கொண்டு 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.