அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி, அமித்ஷா pt web
இந்தியா

“அடுத்த பிரதமர் அமித்ஷா; யோகி அரசியலுக்கு முற்றுப்புள்ளி” கெஜ்ரிவால் குற்றச்சாட்டும் பாஜக பதிலும்..

75 வயதை எட்டிய பின் பிரதமர் மோடி ஓய்வு பெறுவாரா என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், 3வது முறையாகவும் மோடியே பிரதமராக நீடிப்பார் என மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

Angeshwar G

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் அவருக்கு நேற்று முன்தினம் (மே 10) உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதோடு பலவித கட்டுப்பாடுகளையும் உச்சநீதிமன்றம் விடுத்துள்ளது.

யோகி அரசியலுக்கு முற்றுப்புள்ளி?

Delhi CM Arvind Kejriwal

இத்தகைய சூழலில், அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார். அதில், “இவர்கள் INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என கேட்கிறார்கள். பாஜகவினரிடம் நான் கேட்கிறேன், உங்களுக்கான பிரதமர் வேட்பாளர் யார்? பாஜக கட்சி விதிப்படி 75 வயதைப் பூர்த்தி செய்த ஒருவர், அக்கட்சியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். பிரதமர் மோடியே 2014 ஆம் ஆண்டு 75 வயதுடையவர்கள் கட்சியில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என்ற விதியை உருவாக்கினார்.

எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், வசுந்தரா ரஜே, சிவராஜ் சிங் சௌஹான் போன்ற அரசியல் தலைவர்களின் அரசியலுக்கு பிரதமர் மோடியே முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்ததாக யோகி ஆதித்யநாத் அரசியலுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைப்பார். மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், அடுத்த இரண்டு மாதங்களில் யோகி ஆதித்யநாத்தை அவர்கள் மாற்றுவார்கள்.

“அடுத்த பிரதமர் அமித்ஷா” - கெஜ்ரிவால்

அப்படி இருக்க அடுத்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு 75 வயது பூர்த்தியாகிறது. இத்தகைய சூழலில், யாரை முன்னிறுத்தி பாஜக வாக்கு கேட்கிறது?

பிரதமர் மோடி விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போகும் நிலையில், அவரது உத்தரவாதத்தை யார் பூர்த்தி செய்வார்கள்?

நான் மோடியிடம் கேட்கிறேன், நீங்கள் அமித்ஷாவிற்காக வாக்கு கேட்கிறீர்களா?

மக்களே... பிரதமர் மோடி தனக்காக வாக்கு கேட்கவில்லை. அமித்ஷாவை பிரதமர் ஆக்குவதற்காகவே வாக்கு கேட்கிறார்” என தெரிவித்திருந்தார்.

பாஜகவில் எந்த குழப்பமும் இல்லை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

கெஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. தெலங்கானாவில் நடந்த பரப்புரையின் முடிவில் ஹைதராபாத் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “75 வயதை பூர்த்தி செய்தவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று எந்த விதிமுறையும் பாஜகவில் இல்லை. பாஜக தேர்தலில் வெற்றி பெற்றால் மோடியே அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியில் நீடிப்பார். பாஜகவில் எந்த குழப்பமும் இல்லை. பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமராக நீடிப்பார் என I.N.D.I.A. கூட்டணியினருக்கு நன்றாக தெரியும்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த இடைக்கால ஜாமீன் ஜூன் 1 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஜுன் 2 ஆம் தேதி அவர் மீண்டும் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் தன்னை நிரபராதி என்பதுபோல் உணர்ந்தால் சட்டத்தின் மீதான பலவீனமான புரிதலை அவர் கொண்டுள்ளார் என்றே கருதவேண்டியுள்ளது. அதையே இது காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங்

இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகி தனது பதவியை முடிப்பார். பிரதமர் மோடி அரசியலில் நம்பகத்தன்மையின் சின்னமாக இருக்கிறார். ஆனால் கெஜ்ரிவால், நம்பகத்தன்மையின் நெருக்கடி சின்னமாக இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் நட்டா இதுகுறித்து கூறுகையில், “மோடியை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சி கூட்டணிக்கு எந்த கொள்கையோ திட்டமோ இல்லை. தோல்வியை உணர்ந்துள்ள கெஜ்ரிவாலும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் நாட்டை தவறாக வழிநடத்துவதில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். பாஜகவின் அரசியலமைப்பில் வயது தொடர்பான எவ்வித விதியும் இல்லை” என தெரிவித்துள்ளார்.