இந்தியா

கேதார்நாத் குகைகளில் தங்க நாள் ஒன்றுக்கு வாடகை 990 ரூபாய்

கேதார்நாத் குகைகளில் தங்க நாள் ஒன்றுக்கு வாடகை 990 ரூபாய்

Rasus

கேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கியிருந்த குகையானது, பொதுமக்களும் தங்குவதற்கு வசதியாக வாடகைக்கும் விடப்படுகிறது.

தேர்தல் பரப்புரை முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நேற்று காலையில் கேதார்நாத் சென்ற பிரதமர், பாரம்பரிய உடை அணிந்து கோயிலில் வழிபட்டார். பின்னர் கேதார்நாத் குகைக்கோயிலில் தியானத்தில் ஈடுபட்டார். புனித குகைக்கோயிலில் அமர்ந்து பிரதமர் மோடி விடிய விடிய தியானம் செய்தார். இரவு முழுவதும் தியானம் செய்த நிலையில் இன்று காலையில் பத்ரினாத்துக்கு புறப்பட்டார்.

இதனிடையே பிரதமர் மோடி தியானம் செய்த குகையானது இயற்கையானது அல்ல. அது பாறைகளை வெட்டி பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட குகை எனவும், அந்தக் குகையை ஒட்டி 10 அடி உயர கூரை கொண்ட சிறிய கழிவறை அமைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகின. அத்துடன்  மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் குகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி தங்கியிருந்த குகையானது, மக்களும் தங்குவதற்கு வசதியாக வாடகைக்கும் விடப்படுவது தெரிய வந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 990 ரூபாய் என்ற அளவில் குகை வாடகைக்கு விடப்படுகிறது. கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் இணையதளம் மூலம் இதற்காக முன்பதிவு செய்யலாம். 

நாள் ஒன்றுக்கு முதலில் 3000 என நிர்ணயம் செய்யப்பட்ட குகையின் வாடகையானது, பின்னர் பயணிகளின் வருகை குறைவால் நாள் ஒன்றுக்கு 990 ரூபாய்க்கு வாடகைக்கு விடப்படுதாக சொல்லப்படுகிறது. குகை திறக்கப்பட்ட நேரம், அதிகப்படியான குளிர் நிலவிய நேரம் என்பதாலும், முன்பதிவு 3 நாட்களுக்கு முன்னரே செய்ய வேண்டியிருந்ததாலும் குகைக்கு பயணிகள் அதிகம் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

குகையில் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளுடன் தேநீர், காலை உணவு, மதிய உணவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. அத்துடன் தனியாக தங்கியிருக்கும்போது ஏதாவாது பிரச்னை என்றால் எந்தநேரமும் உதவிக்கு அழைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியாக தியானம் மேற்கொள்வோருக்கு இந்தக் குகை சிறப்பாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.