KEA bans headcoverings pt web
இந்தியா

‘தலையை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை’ கர்நாடக தேர்வு ஆணையம் அறிவிப்பின் முழு பின்னணி!

கர்நாடகத்தில் தலையை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதித்து கர்நாடக தேர்வு ஆணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் முழு பின்னணியை அறியலாம்.

Angeshwar G

கர்நாடகத்தில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் பல்வேறு அரசு வாரியங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வுகள் நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கு வரும் தேர்வாளர்களின் உடைகள் குறித்த அறிவிப்புகளை கர்நாடகத் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

அதில் தலையை மறைக்கும் அனைத்து வகையான உடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது தலை, வாய், காதுகளை மறைக்கும் எந்த வகையான உடையை எக்ஸாம் ஹாலுக்கு அணிந்து வருவோரும் தேர்வறைக்குள் அனுமதிக்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளில் ப்ளூடூத் போன்ற சாதனங்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் ஹிஜாபை குறிப்பிடவில்லை என்றாலும் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதை வாரியம் அனுமதிக்காது என்று கூறப்படுகிறது.

நவம்பர் 6 ஆம் தேதி நடந்த தேர்வின் போது திருமணமான இந்துப் பெண்கள் அணியும் மங்கள்சூத்ரா எனப்படும் தாலிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் மெட்டி, மோதிரம், கம்மல் போன்ற நகைகளை அணியவும் அனுமதி மறுக்கப்பட்டது. இது இந்துத்வா தரப்பினரிடையே கடும் எதிர்ப்பினை சந்தித்தது. இந்நிலையில் தற்போது திருமணமான இந்துப் பெண்கள் அணியும் மங்களசூத்திரா எனப்படும் தாலிகளுக்கும் காலில் அணியும் மெட்டிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற நகைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு வாரியம், ‘எலக்ட்ரானிக் பொருட்களான செல்போன்கள், ப்ளூடூத் சாதனங்கள் போன்றவை அனுமதிக்கப்படாது’ என்று தெரிவித்துள்ளது. பெண்கள் ஹை ஹீல் ஷூக்கள் அணியவும், ஜீன்ஸ், டீ சர்ட் அணியவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் அரைக்கை டீ சர்ட் அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.