இந்தியா

'இது கே.சி.ஆர். வெர்ஷன் 2.0' தெலுங்கானாவில் வைரலாகும் புகைப்படம்

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டது. பாஜக தனித்து களம் கண்டது. இதனால், மும்முனை போட்டி நிலவியது. 

கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்றே கூறிய நிலையில் மொத்தமுள்ள 112 தொகுதிகளில்  டிஆர்எஸ்  88 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இதன்மூலம் சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சராகிறார்.

இந்நிலையில் தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர் ராவ் நாளை பதவி ஏற்கிறார். தெலங்கானா சட்டப்பேரவையில் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறுதிப்பெரும்பான்மைக்கும் அதிகமாக 88 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த வெற்றியை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இதனையடுத்து தெலுங்கானா முதல்வராக பதவியேற்க இருக்கின்ற சந்திரசேகரராவின் புகைப்படத்தை, 2.0 படத்தில் இருக்கும் ரஜினியின் படத்துடன் இணைத்து "இது கே.சி.ஆர். வெர்ஷன் 2.0" என சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகின்றனர் சந்திரசேகராவின் தொண்டர்கள். மேலும், இந்தப் புகைப்படத்தை போஸ்டராக்கி தெலுங்கானாவின் பல்வேறு இடங்களில் ஒட்டி வருகின்றனர். இதுமட்டமல்லாமல் பல செய்தி ஊடக தொலைக்காட்சிகள் சந்திரசேகர ராவை, பாகுபலியாகும் சித்தரித்து செய்தியை ஒளிபரப்பியது.