உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, சமூக விலகல் வேண்டுமென அரசு வலியுறுத்தி வருகிறது. கோடிக்கணக்கான மக்களும் இதனைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் சமூக விலகலை தற்போது உச்சக்கட்டத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த சமூக விலகலை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவை இத்தாலி மக்கள் தற்போது அனுபவித்து வருகிறார்கள்.
சமூக விலகலை மிகத்தீவிரமாக கடைப்பிடியுங்கள் என மக்களுக்கு அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா 500 பேருக்கு மேல் கலந்து கொண்ட ஒரு பார்ட்டியை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கவிதா, ஹைதராபாத்தில் உள்ள ரிசார்ட்டில் இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒரு மீட்டர் இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த நிலையில், அவரது மகளே 500 பேருக்கு மேற்பட்டவர்களை ஒன்று கூட்டி நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதில், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் தங்களது விமர்சனங்களையும், கண்டனங்களையும் முன்வைத்து வருகின்றனர். தெலங்கானா பாஜக தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. நிஜாமாபாத்திலிருந்து சட்டமன்ற மேலவைக்கான தெலங்கானா ராஸ்ட்ரா சமிதி (டிஆர்எஸ்) வேட்பாளராக கவிதா போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.