இந்தியா

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேர் குற்றவாளி ! பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பு

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேர் குற்றவாளி ! பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பு

webteam

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் கடந்த 2018 ஜனவரியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரு சிறார் உள்பட 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள 8 பேரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய சம்பவமாக இந்த குற்றச் சம்பவம் அமைந்தது.

இந்த வழக்கின் விசாரணை பஞ்சாப்பின் பதான்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்றுவந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 3ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியது. இதில் குற்றஞ்சாட்டப் பட்ட ஏழு பேரில் 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கில் கிராம தலைவர் சஞ்சி ராம், இரண்டு சிறப்பு காவல்துறை அதிகாரிகள் தீபக் காஜுரியா, சுரேந்தர் வர்மா மற்றும் தலைமை காவலர் திலக் ராஜ் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது. 


முன்னதாக இந்த வழக்கில் கைதான் 8 பேரில் சிறுவன் மீது வழக்கு விசாரணை தொடங்கப்படவில்லை. ஏனென்றால் அந்த சிறுவனின் வயது தொடர்பான மனு மீதான விசாரணை ஜம்மு-காஷ்மீர்  உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் கைதான மற்ற 7 பேர் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

மேலும் இந்த வழக்கில் ஜம்மு-காஷ்மீர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், “தொலைந்து போன தனது குதிரையை தேடச் சென்ற சிறுமியை வழக்கில் தொடர்புடைய சிறுவன் குதிரை தேடி தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். அத்துடன் இந்தக் கொலை அங்கு வாழும் நாடோடிகள் சமூகத்தை அகற்றுவதற்காவே திட்டமிட்டு நடைபெற்றது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  அத்துடன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஜம்மு-காஷ்மீரில் போராட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.