இந்தியா

ஆசிஃபாவை அடக்கம் செய்ய இடம் கூட கொடுக்கமாட்டீர்களா.. என்ன கொடுமை இது?

ஆசிஃபாவை அடக்கம் செய்ய இடம் கூட கொடுக்கமாட்டீர்களா.. என்ன கொடுமை இது?

rajakannan

ஜம்மு-காஷ்மீரின் கதுவா பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சிறுமியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்த்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.  

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி ஆசிஃபாவுக்கு நீதி வேண்டும் என்று இந்தியா முழுவதும் குரல் எழுந்து வருகிறது. கேரளாவில் ஒருவர் தன்னுடைய மகளுக்கு ஆசிஃபா என பெயரிட்டுள்ளார். சமூக வலைதளங்கள் முழுவதும் கூட ஆசிஃபாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த குரல்கள் எல்லாம் சிறுமியின் ரசானா கிராமத்திற்கு எட்டவே இல்லையா?. 

சிறுமியின் உடலை ரசானா கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய நேற்று உறவினர்கள் முயன்றுள்ளனர். அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் சிறுமியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முஸ்லீம் சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும்தான் அந்த இடத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதி உண்டு என்று கூறி சிறுமியின் உடலை அங்கே அடக்கம் செய்வதை தடுத்து நிறுத்தினர். இதனால், ரசானா கிராமத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் உள்ள நிலத்தில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டது. நிலத்தின் ஒரு மூளையில் 5 அடியில் சிறுமி புதைக்கப்பட்டார். அதில் தலை, கால் பகுதிகளில் இரண்டு பெரிய கற்கள் அடையாளத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சிறுமியின் உறவினர் ஒருவர் பேசுகையில், “எங்களுடைய வழக்கப்படி, இறந்த உடன் கல்லறைக்கு ஏற்பாடு செய்வதில்லை. சிறுமியின் பெற்றோர் தங்கள் கால்நடைகளுடன் வருடாந்திர யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிய பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கல்லறை அமைக்கப்படும்” என்றார்.

சிறுமியின் உடல் கடந்த ஜனவரி 17ம் தேதிதான் கண்டறியப்பட்ட நிலையில், அவரது வளர்ப்பு தந்தை ரசானா கிராமத்தில் உள்ள துண்டு நிலத்தில் அடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் தன்னுடைய 3 குழந்தைகள் மற்றும் மனைவி இறந்த போதும்  அவர்களையும் அதே இடத்தில் தான் அடக்கம் செய்துள்ளார். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இதுவரை அவர்கள் சட்டவிரோதமாக அடக்கம் செய்து வந்துள்ளனர் என்று கூறுகின்றனர்.

இதனையடுத்து அவரகளது உறவினர் ஒருவர் அந்த கிராமத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னுடைய நிலத்தில் உடலை அடக்கம் செய்ய கொடுத்துள்ளார். அந்த உறவினர் கூறுகையில், “சிறுமியின் வளர்ப்பு பெற்றோர்கள் ஒரு இந்து குடும்பத்திடம் இருந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத்தை வாங்கியுள்ளனர். ஆனால், ஆவணங்களை பதிவு செய்யும் பணிகளை முழுமையாக முடிக்கவில்லை. அதனால், இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு அவர்கள் எங்களை தடுத்து நிறுத்தினர்” என்றார்.

இதுகுறித்து சிறுமியின் பாட்டி கூறுகையில், “மாலை சுமார் 6 மணி இருக்கும். சாலை உடலை அடக்கம் செய்ய குழி தோண்டிக் கொண்டிருந்த போது கிராம மக்கள் அங்கு வந்தார்கள். அவர்கள் எங்களை மேற்கொண்டு தோண்ட விடாமல் தடுத்து நிறுத்தினர். சில ஆவணங்களை காட்டி அந்த நிலம் உங்களுக்கு சொந்தமானது அல்ல என்று கூறினர்” என்றார். 

“சிறுமியின் உடலை அடக்கம் செய்ய எவ்வளவு இடம் ஆகும்? எங்கள் கைகளில் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி இருக்கிறாள். இந்த நேரத்தில் கிராம மக்கள் தங்களது மனிதாபிமானத்தை காட்டி இருக்க வேண்டும்” என்றும் அவர் வேதனைப்பட்டார்.