இந்தியா

ஆசிஃபா வழக்குக்கு வலு சேர்க்கும் தலைமுடி ! தடயவியல் அறிக்கையில் தகவல்

webteam

காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தடயவியல் சோதனை அறிக்கை வந்துள்ளது

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் உள்ளூர் காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு ஆதாரங்களை அழிக்க முயற்சித்துள்ளனர். இவ்விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் இவ்விவகாரத்தில் முக்கிய நபராக கருதப்படும் ராம் என்பவரை விடுவிக்க கோரி மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைப்பெற்றது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து காஷ்மீர் பார் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் தரப்பில் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என்று தெரிவிக்கப்பட்டது. இச்சபவத்தில் முக்கிய நபராக கருதப்படும் ராம், செய்தியாளர்களிடம் பேசியபோது, உண்மை கண்டறியும் சோதனைக்கு பின்னர் எல்லாம் தெரியவரும் என கூறினார்.

இந்நிலையில் இவ்வழக்கில் தடயவியல் சோதனை அறிக்கை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வந்துள்ளது. சிறுமியின்  உடைகள், இரத்தம் படிந்த மண் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் உள்ளிட்ட 14 பொருட்கள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக தடயவியல் ஆய்வக அதிகாரிகள் கூறுகையில், தடயவியல் சோதனையில் குற்றவாளிகளுக்கு எதிராக அறிக்கை வந்துள்ளது. காவல்துறையினர் அளித்த ரத்த மாதிரிகளுடன் அவை ஒத்துப்போகிறது. இந்த அறிக்கை ஏப்ரல் 3ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் சிறப்பு புலனாய்வு துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கோவிலில் இருந்து இரண்டு தலைமுடிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டது. தற்போது அதுவும் யாருடையது என கண்டறியப்பட்டுள்ளது. தலைமுடியின் வேர்களை ஆராய்ந்ததில் ஒன்று படுகொலை செய்யப்பட்ட சிறுமியுடையது மற்றொன்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடையது என தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மிகவும் முக்கியமான ஆதாரமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

சிறுமியின் உடைகளில் இருந்த தடயங்களை உள்ளூர் காவல்துறையினர் மறைக்க முயற்சித்துள்ளனர். சிறுமியின் ஆடைகளில் இருந்த சேற்றை தண்ணீரைக் கொண்டு கழுவியுள்ளனர். மேலும் ஆடைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்துள்ளனர். இதனால் தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்த உடைகளில் இருந்த ரத்தக்கறை அழியவில்லை அதனை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் இல்லை.வழக்கை ஆரம்ப நிலையிலே உள்ளூர் காவல்துறையினர் மறைக்க முயற்சித்துள்ளனர். இந்த வழக்கிற்கு தடயவியல் சோதனை அறிக்கைகளே வலு சேர்க்கும் என தெரியவருகிறது.