இந்தியா

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்

webteam

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2018 ஜனவரியில் ஜம்மு- காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 8 பேரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய சம்பவமாக இந்தக் குற்றச் சம்பவம் அமைந்தது.

இந்த வழக்கின் விசாரணை பஞ்சாப்பின் பதான்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 3ஆம் தேதி முடிவடைந்தது. 

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரில் 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கில் கிராம தலைவர் சஞ்சி ராம், இரண்டு சிறப்பு காவல்துறை அதிகாரிகள் தீபக் கஜுரியா, சுரேந்தர் வர்மா மற்றும் தலைமை காவலர் திலக் ராஜ் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது. 

இந்தத் தீர்ப்பின் படி இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சஞ்சிராம், தீபக் காஜூரியா மற்றும் பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து சிறுமியின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஏனென்றால் இந்தப் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில் இருந்த போது அந்தக் குடும்பத்தினர் மற்றும் பலர் இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது  குறிப்பிடத்தக்கது.