இந்தியா

ஆந்திராவில் தஞ்சம் புகுந்த காசிமேடு மீனவர்கள்

ஆந்திராவில் தஞ்சம் புகுந்த காசிமேடு மீனவர்கள்

webteam

ஆந்திராவில் மீன் பிடிக்க சென்ற காசிமேடு மீனவர்கள் கஜா புயலின் காரணமாக கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கஜா புயல் இன்று மாலையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இன்று மாலை அல்லது இரவு நாகை அருகே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகே 300 கி.மீ தொலைவிலும் நாகைக்கு அருகே 300 கி.மீ தொலைவிலும் கஜா புயல் மையம் கொண்டிருப்பதாகவும் 5 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது, மணிக்கு 8 கி.மீட்டரிலிருந்து 18 கி.மீட்டர் வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

நாகை, கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கஜா புயல் கரையை கடக்கும்போது நாகை, கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். பாதுகாப்புக்காக மக்களின் நலன் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இதையடுத்து ஆந்திராவில் மீன் பிடிக்க சென்ற காசிமேடு மீனவர்கள் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்க சென்ற அவர்கள் புயல் எச்சரிக்கையால் அப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் நாகை, காரைக்கால் மீனவர்களின் 150 படகுகளும் பத்திரமாக அங்கு தக்கவைக்கப்பட்டுள்ளன.