ரூ,1.82 லட்சம் செலவு செய்து வெளிமாநில தொழிலாளர்களை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற ஆந்திர தொழிலபதிர்களுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது நான்காம் கட்டமாக மே31 வரை ஊரடங்கு
நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதும் ஊரடங்கு தொடர்ந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பல்வேறு மாநிலங்களில்
சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக பல்வேறு மாநில அரசுகள் சிறப்பு ரயில் சேவையையும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் இருந்து காஷ்மீர் செல்லவேண்டிய 80 தொழிலாளர்கள் ரயில் நிலையம் செல்ல முடியாமல் தவித்துள்ளனர்.
ஆந்திராவின் புட்டபார்த்தியில் இருந்து 436கிமீ-ல் இருக்கும் ஹைதராபாத் சென்றால் ரயில் மூலம் காஷ்மீர் சென்றுவிடலாம் என்ற நிலையில் அந்த தொழிலாளர்கள் ஹைதராபாத் செல்ல முடியாமல் தவித்துள்ளனர். பேருந்து ஏற்பாடு செய்து சென்றுவிடலாம் என்று திட்டமிட்ட தொழிலாளர்களிடம் ரூ.1.82 லட்சம் பணமிருந்தால் அழைத்துச் செல்லலாம் என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கையில் பணமின்றி தவித்த தொழிலாளர்களுக்கு ஆந்திராவைச் சேர்ந்த ராம் மற்றும் லக்ஷ்மண் என்ற இரு தொழிலதிபர்கள் உதவி செய்துள்ளனர். ரூ.1.82 லட்சம் சொந்த பணத்தை செலவு செய்த இருவரும் தொழிலாளர்களை 3 பேருந்துகள் மூலம் ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள தொழிலாளர் ஒருவர், அரசு எங்களை இலவசமாக அழைத்துச் செல்லும் என்றனர். ஆனால் எங்களிடம்
பேருந்துக்காகவே ரூ.1.82 லட்சம் கேட்கின்றனர். எங்களுக்கு தொழிலதிபர்கள் இருவர் உதவி செய்துள்ளனர். அவர்கள் பணத்தை நிச்சயம்
திருப்பிக் கொடுப்போம் எனத் தெரிவித்தார்.
இது குறித்து தெரிவித்த தொழிலதிபர் லக்ஷ்மண், அவர்கள் இதே பகுதிகள் 20 வருடங்களாக இருக்கிறார்கள். அவர்களும் எங்கள் சகோதரர்கள் தான். அவர்களை ரயில் நிலையத்திற்கு அனுப்ப அரசின் உதவியை நாடினோம். சரியான பதில் இல்லை. அதனால் நாங்களே சொந்த செலவில் அனுப்பி வைத்தோம். தொழிலாளர்கள் பணத்தை திருப்பித் தருவதாக கூறினார்கள். அவர்கள் தரவில்லை என்றாலும் பரவாயில்லை. இதை நாங்கள் சேவை போல நினைத்துக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.