jammu kashmir women twitter
இந்தியா

27 ஆண்களை திருமணம் செய்த இளம்பெண்: அடுத்தடுத்து குவிந்த புகாரால் மிரண்டுபோன காஷ்மீர் போலீஸ்!

ஜம்மு காஷ்மீரில் 27 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு அவர்களுடைய நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்ற இளம்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முகமது அல்தாப் மார் என்பவர், கடந்த ஜூலை 5ஆம் தேதி, காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ’தன்னுடைய மனைவி மற்றும் பணம், நகைகளையும் காணவில்லை’ என தெரிவித்துள்ளார். அப்போதுதான் அதே பெண்ணை வேறு சிலரும் காணவில்லை எனப் புகார் அளித்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக, 12க்கும் மேற்பட்ட ஆண்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

இதில், புட்காமைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவரான முகமது அல்தாஃப் மிர், ’அந்தப் பெண் தமக்கு ஓர் திருமண புரோக்கர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பிறகே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு நான்கு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தேன். அதற்குப் பின்பு, அவர் என்னிடமிருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு மாயமாகி விட்டார்’ எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணான ஷாஹீன் அக்தரை, ஜூலை 14 அன்று அவர் கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட ஷாஹீன் அக்தர், 27 பேரை இவ்வாறு ஏமாற்றி திருமணம் செய்திருப்பதாகவும், அதில் பாதிக்கப்பட்ட 12 பேர் மட்டுமே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த 27 பேரை திருமணம் செய்துகொண்ட ஷாஹீன் அக்தர், அவர்களுடன் 20 நாட்கள் மட்டுமே வாழ்ந்துவிட்டு, அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.