காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட உள்ள நிலையில் அங்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதாகவும், அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அறிவித்தார். அத்துடன் நாடாளுமன்றத்திலும் இதுதொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் காஷ்மீரில் வன்முறைகள் ஏற்படுவதை தடுக்கு கடுமையான பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. அத்துடன் ஊரடங்கு உத்தரவும் செல்பொன் சேவை கட்டுப்பாடுகளும் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை காஷ்மீரில் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என்றும் அமைதி நிலவுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவு குறித்து நாட்டு மக்களுக்கு நாளை தொலைக்காட்சி மூலம் பிரதமர் உரையாற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் மாநில முதலமைச்சர்களிடமும் பிரதமர், மத்திய அரசின் முடிவு குறித்து அவர் விளக்குவார் எனவும் தெரிகிறது.
இதற்கிடையில் காஷ்மீர் குறித்த தங்கள் முடிவு பற்றி வெளிநாட்டு அதிகாரிகளிடம் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாட்டு தூதரக அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் மத்திய அரசின் முடிவுக்கான காரணம் குறித்து விளக்கினர்.
முன்னதாக காஷ்மீர் குறித்த இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். காஷ்மீரை இரண்டாக பிரிக்க முடிவெடுத்துள்ள நிலையில் புதிய யூனியன் பிரதேசங்களின் எல்லைகளை வரையறுக்கும் சிறப்பு குழு விரைவில் நியமிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிதாக அமையும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 107ல் இருந்து 114 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போதைய பாதுகாப்பு சூழல் குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் ஆய்வு செய்தார்.