இந்தியா

உங்கள் வீட்டுக்கே வரும் சூடான வீட்டுச் சாப்பாடு - காஷ்மீர் இளைஞரின் புதுமை முயற்சி!!

உங்கள் வீட்டுக்கே வரும் சூடான வீட்டுச் சாப்பாடு - காஷ்மீர் இளைஞரின் புதுமை முயற்சி!!

webteam

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் சமைக்கப்பட்ட சூடான அறுசுவை உணவை, கொரோனா பாதுகாப்பு தடுப்பு உடைகளுடன் சென்று டோர்டெலிவரி செய்துவருகிறார் காஷ்மீர் இளைஞர் ஒருவர். ஸ்ரீநகரைச் சேர்ந்த ராயிஷ் அஹமது என்ற அந்த 29 வயது இளைஞரை   "காஷ்மீர் ஸ்விக்கி பையன்" என்று மக்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.

பொதுவாக வெளியில் இருந்து ஆர்டர் செய்தாலே அது செயற்கை உணவாகத்தான் இருக்கும். ஆனால் அவரோ வீட்டில் சமைக்கப்பட்ட சூடான உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி ஆச்சரியப்படுத்துகிறார். அதற்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உணவுகளின் விலையும் எல்லோரும் வாங்கும் அளவுக்கு குறைவாக இருக்கிறது.

ஊரடங்கு காலத்தில் யாரிடமும் வேலைக்குச் செல்லாமல், அவரே தனியாக உணவு வழங்கும் தொழிலைத் தொடங்கிவிட்டார். அதற்கு பெயர் டிபன் ஆவ். அதாவது சாப்பாடு உங்களைத் தேடிவரும் என்று பொருள். காஷ்மீர் பகுதியில் இப்படியொரு சர்வீஸ் இருப்பது இதுவே முதல்முறை என்கிறார் அவர்.

"அதுவொரு குளிர்கால பனி இரவு. பதினோரு மணிக்கு நண்பர் ஒருவரிடம் இருந்து போன் வந்தது. சாப்பாடு எங்குமே இல்லை. ஏதாவது ஏற்பாடு செய்யமுடியுமா என்று அவர் கேட்டார் " என்கிறார் ராயிஸ். பின்னர் வீட்டுக்குச் சென்று சமைத்து உடனே எடுத்துச் சென்று நண்பருக்குக் கொடுத்திருக்கிறார். அதுவே இந்த புதுமை ஐடியா உருவானதற்குக் காரணமாகவும் அமைந்துவிட்டது.

பிப்ரவரியில் தனி நபராக உணவு விநியோகத்தைத் தொடங்கிய ராயிஷ், இன்று அவரது குழுவில் ஐந்து பேர் வேலை செய்துவருகிறார்கள். அவர்கள் எல்லோரும் ஊரடங்கு நாட்களில் வேலை இழந்தவர்கள். இந்த கனவுத் திட்டத்தில் மேலும் பலருக்கு வேலை வழங்கும் திட்டத்தையும் இளைஞர் ராயிஷ் அஹமது வைத்திருக்கிறார்.