காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் போலீஸார் நடத்தி துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஊடுருவ எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் காத்துக் கொண்டிருப்பதாக உளவுத் துறையினருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது. இதன்பேரில், எல்லைப் பகுதி முழுவதும் ராணுவத்தினர் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, காஷ்மீர் போலீஸாரும் எல்லைப்புற கிராமங்களில் தினமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜுமாகுண்ட் என்ற கிராமத்தில் இன்று அதிகாலை போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு ஜீப், போலீஸாரை கண்டதும் வேறு வழியில் திரும்பிச் சென்றது. இதனை பார்த்த போலீஸார் அந்த வாகனத்தை துரத்திச் சென்றனர். இதில் பாதி வழியில் அந்த ஜீப்பில் இருந்து இறங்கிய 3 தீவிரவாதிகள், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீஸாரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஐ.ஜி. விஜய்குமார் தெரிவித்தார்.