இந்தியா

"ஒரே ஒரு பட்ஜெட், நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்காது"- கார்த்தி சிதம்பரம் பேட்டி

"ஒரே ஒரு பட்ஜெட், நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்காது"- கார்த்தி சிதம்பரம் பேட்டி

webteam

“அதானி பொய்யாக நிறுனத்தை உருவாக்கினார் என்பதை விசாரணை மூலமாகத்தான் தெளிவுபடுத்த வேண்டும். பாராளுமன்ற கூட்டுக்குழு மூலமாக அந்த உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்” என்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் `தமிழ்நாடு கட்டுமானம் அமைப்புசாரா தொழிற்சங்க மண்டல மாநாடு’ நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை நாடாளுமன்ற‌ உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டார்‌. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதியை குறைத்து உள்ளார்கள். மற்றொருபக்கம், சிறுபான்மையினருக்கு கொடுக்கப்படும் கல்வி உதவித்தொகையை நிறுத்தி உள்ளார்கள். இந்த இரண்டு செயல்களே, பாஜகவின் சமூக பார்வையை காட்டுவதற்கு போதுமானதாக இருக்கிறது.

இந்த மத்திய அரசு, ஒரே ஒரு தொழில் குடும்பத்திற்கு மட்டும் உதவி செய்கிறது. அவர்களுடைய தொழில் வளர்ச்சியை மட்டுமே இவர்கள் கண்காணிக்கிறார்கள். நாட்டில் ஏற்படும் பிற தொழில்தேர்வுகளின் முடிவுகளை இவர்கள் கண்டு கொள்வதே கிடையாது. பாஜக-வின் பார்வை பெரும்பாலும் மேல்தட்டு மக்களை சார்ந்தே உள்ளது.

ஒரே ஒரு பட்ஜெட், நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்காது. பங்கு சந்தை மீதுள்ள நம்பிக்கை குறையும் போதெல்லாம், தங்கம் விலை உயர்வு இருக்கும். அதானி, பொய்யாகத்தான் தன் நிறுனத்தை உருவாக்கினார் என்பதை விசாரணை மூலமாகத்தான் தெளிவுபடுத்த வேண்டும். பாராளுமன்ற கூட்டுக்குழு மூலமாக உண்மையை அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தமிழ்நாட்டில், பேனா சிலையை உடைப்பது சாதனை ஆகாது. `பேனா எழுதிய எழுத்தை விட, எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த கருத்தை நான் கூறுவேன்’ என்று சீமான் சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.