கர்நாடக மின் ஊழியர்கள் twitter pages
இந்தியா

”மின்கட்டணம் செலுத்த மாட்டோம்”.. களத்தில் குதித்த கர்நாடக கிராம மக்கள்! ஏன் தெரியுமா?

Prakash J

அண்டை மாநிலமான கர்நாடகாவில், 224 தொகுதிகளுக்கும் கடந்த 10ஆம் தேதி, ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், மே 13ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது காங்கிரஸ் 135 இடங்களில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.

இதைத் தொடர்ந்து அக்கட்சி விரைவில் ஆட்சியமைக்கப் போகிறது. அம்மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்ற அறிவிப்பு, இன்று காங்கிரஸ் தலைமையால் அறிவிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மின்கட்டணம் செலுத்த மறுத்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஜாலிகட்டே கிராமத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தக் கிராமத்துக்கு வழக்கம்போல் மின் கணக்கீடு எடுப்பதற்காக ஊழியர்கள் சென்றுள்ளனர். அவர்களை மின் கணக்கீடு எடுக்கவிடாமல் கிராம மக்கள் தடுத்துள்ளனர். ”ஏன் தடுக்கிறீர்கள்” என ஊழியர்கள் அவர்களிடம் கேட்க, ”காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. அதனால் நாங்கள் மின் கட்டணத்தைச் செலுத்த மாட்டோம்” எனக் கூறி அவர்கள் மறுத்ததாகச் சொல்லப்படுகிறது.

அதாவது, ’ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்’ என கர்நாடக தேர்தல் அறிக்கையின்போது காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. அதை மனதில்வைத்தே, இந்த கிராம மக்கள் மின்சார கட்டணத்தைச் செலுத்த மறுத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி, தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால், இப்போதிலிருந்தே அவர்கள் மின் கட்டணம் செலுத்த மாட்டோம் என மக்கள் கூறியுள்ளனர்.

கர்நாடகத்தில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றும் புதிய ஆட்சி இன்னும் அமையாமல் உள்ளது. அரசு அமைந்த பின்பே, 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக புதிய ஆணை வெளியிடப்படும். ஆனால், அதற்குள் வாக்குறுதிகளை அக்கிராம மக்கள் கையிலெடுத்திருப்பது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கர்நாடக பாஜக ஐடி விங் தலைவர் அமித் மலவியா, ”சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த மக்கள் மின் கட்டணம் செலுத்த மறுத்து வருவதாகவும் மற்றவர்களையும் செலுத்த விடாமல் தடுத்து வருவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், விரைவில் காங்கிரஸ் கட்சி முதலமைச்சரை தேர்வு செய்து ஆட்சியை அமைக்காவிட்டால் மாநிலத்தில் பல்வேறு பிரச்னைகள் மற்றும் குழப்பங்கள் உருவாகக் கூடும்” என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின்போது காங்கிரஸ் கட்சி பல்வேறு இலவசங்களை அறிவித்துள்ளது. அதில் மூன்று முக்கிய இலவசங்களால் ஒதுக்கும் நிதியால் மாநில அரசுக்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.